இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) 37ஆவது தலைவர் இன்று மிதுன் மன்ஹாஸ் பொறுப்பேற்றுக் கொண்டார். முன்பு ரோஜர் பின்னி இந்த பதவியை வகித்திருந்தார், ஆனால் வயது 70ஐ கடந்ததால் அவர் தலைவராக இருந்து விலகினார். மிதுன் மன்ஹாஸ் பதவிக்கு தேர்வு செய்யப்படுவதால் கிரிக்கெட் உலகில் பெரும் ஆர்வமும் வாழ்த்துகளும் வந்துள்ளன. கிரிக்கெட் பிரபலர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மிதுன் மன்ஹாஸ் IPL (Indian Premier League) கிரிக்கெட் தொடரில் பல ஆண்டுகள் செயல்பட்டவர். இவர் டெல்லி டேர்டெவில்ஸ், புனே வாரியர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய 3 அணிகளுக்காக விளையாடியுள்ளார். 2022 சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் பயிற்சியாளராகவும் பணியாற்றியுள்ளார்.
மிதுன் மன்ஹாஸ் முதல் தரப் போட்டிகளில் 27 சதங்கள் உட்பட 9,714 ரன்கள் எடுத்துள்ளார். லிஸ்ட் ஏ (List A) போட்டிகளில் 4,126 ரன்களையும் சேர்த்துள்ளார். உள்நாட்டு போட்டிகளில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும், தேசிய அணியில் விளையாட வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை.
மிதுன் மன்ஹாஸ் தலைவராக பொறுப்பேற்ற பிறகு, இடைக்கால தலைவராக இருந்த ராஜீவ் சுக்லா துணைத் தலைவராக பணியாற்றுவார். இவரது அனுபவம் மற்றும் IPL கேரியர் பிசிசிஐக்கு பலனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.