ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் ஜோராக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து வந்துள்ள வெளிநாட்டு வீரர்கள் தங்கள் திறமையால் ரசிகர்களுக்கு விருந்தளித்து வருகிறார்கள். ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே பாகிஸ்தான் வீரர்கள் இந்த போட்டியில் பங்கேற்க முடியாமல் தவித்து வருகிறார்கள்.

2008ஆம் ஆண்டு ஐபிஎல் தொடங்கிய போது சாகித் அப்ரிடி, சோயப் அக்தர் உள்ளிட்ட பாகிஸ்தான் நட்சத்திரங்கள் பங்கேற்றிருந்தனர். ஆனால் அதே ஆண்டில் மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தான் வீரர்களுக்கு இந்தியாவில் விளையாட தடை விதிக்கப்பட்டது. இந்த தடை இன்றுவரை நீடித்து வருவதால் பாகிஸ்தான் வீரர்களின் ஐபிஎல் கனவு தடைபட்டுள்ளது.
இந்த நிலையில், பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் முகமது அமீர், ஐபிஎல் தொடரில் விளையாட ஆசைப்பட்டு, அதற்கான வாய்ப்பை நாடி வருவதாக தெரிவித்துள்ளார். பிஎஸ்எல் தொடரை விட்டு விட்டு வர தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
அமீர் கூறியதாவது, “நான் ஒருநாள் ஐபிஎல் தொடரில் விளையாடுவேன் என்பதில் உறுதியுடன் இருக்கிறேன். வாய்ப்பு கிடைத்தால் நிச்சயமாக பங்கேற்பேன். அடுத்த ஆண்டு அந்த வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன். கிடைத்தால் ஏன் விளையாடக் கூடாது?”
இருப்பினும், வாய்ப்பு கிடைப்பது சிரமமானதுதான். “பிஎஸ்எல் மற்றும் ஐபிஎல் ஒரே நேரத்தில் நடத்தப்படுமானால், நான் எதில் முதலில் தேர்வு செய்யப்படுகிறேனோ அதில் பங்கேற்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். ஏனெனில் அந்த நேரத்தில் போட்டியிலிருந்து வெளியேற முடியாது. பிஎஸ்எல்லில் விளையாடும் முடிவெடுத்துவிட்டால், ஐபிஎல்லில் பங்கேற்க முடியாது. அதேபோல், ஐபிஎல்லில் தேர்வு செய்யப்பட்டால், பிஎஸ்எல்லை தவிர்க்க வேண்டி வரும்,” என அவர் கூறினார்.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல் நடந்து, அதன்பின்னர் இந்தியாவில் இருந்த பாகிஸ்தான் அதிகாரிகள் வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேசமயம், இந்தியா பாகிஸ்தானுக்கு தண்ணீர் வழங்குவதை நிறுத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சூழலில் முகமது அமீரின் ஐபிஎல் கனவு நிறைவேறும் வாய்ப்பு குறைவாகவே இருப்பதாக கூறப்படுகின்றது.