ஐதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள உப்பல் பகுதியில் ராஜீவ் காந்தி கிரிக்கெட் ஸ்டேடியம் உள்ளது. இது ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்தால் (HCA) நிர்வகிக்கப்படுகிறது. இந்நிலையில், விவிஎஸ் லட்சுமண் ஸ்டாண்ட் என அழைக்கப்படும் இந்த ஸ்டேடியத்தில் உள்ள ஒரு ஸ்டேண்டிற்கு, 2019-ல், ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருந்த அசாருதீன் தலைமையிலான நிர்வாகக் குழு, ‘முகமது அசாருதீன் ஸ்டாண்ட்’ என பெயர் மாற்றம் செய்தது.

இந்நிலையில், இதை எதிர்த்து ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரை நீதிபதியும், எச்.சி.ஏ. குறைதீர்ப்பு அதிகாரியுமான வி.ஈஸ்வர்யா விசாரித்தார். விசாரணையின் முடிவில் இது அதிகார துஷ்பிரயோகம் எனக்கூறி அசாருதீன் பெயரை நீக்க உத்தரவிட்டார். ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் பொதுக்குழுவில் எந்த முடிவும் எடுக்காமல் தன்னிச்சையாக அசாருதீன் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. இது சட்டவிரோதமானது. எனவே, பெயர் நீக்கப்படுகிறது. மேலும் அந்த ஸ்டாண்டை இனி விவிஎஸ் லட்சுமண ஸ்டாண்ட் என்று அழைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.