மும்பையில் பேசிய முகமது ஷமி, 2025 ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் கிடைக்காதது குறித்து தனது மனக்கசப்பை வெளிப்படுத்தியுள்ளார். துலீப் டிராபி டெஸ்ட் தொடரில் ஐந்து நாட்கள் விளையாட முடிந்தால், டி20 போட்டியில் விளையாட முடியாதா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆகஸ்ட் 19 அன்று அறிவிக்கப்பட்ட அணியில் ஷமியின் பெயர் இடம்பெறவில்லை. 2023 உலகக்கோப்பையில் 24 விக்கெட்டுகளை வீழ்த்தியதும், 2025 சாம்பியன்ஸ் டிராபியிலும் அதிக விக்கெட்டுகள் எடுத்தும் இருந்தவர் என்பதால், அவரின் புறக்கணிப்பு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

“தேர்வு செய்யப்படாததற்காக யாரையும் குறை சொல்ல மாட்டேன். ஆனால் நான் கடின உழைப்பில் உள்ளேன். எனக்கு வாய்ப்பு கிடைக்கும் போது திறமையை நிரூபிப்பேன்” என அவர் குறிப்பிட்டார். மேலும், சமீபத்திய உடற்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றதாகவும் தெரிவித்தார்.
ஆனால், 2025 ஐபிஎல் தொடரில் மோசமான பந்துவீச்சே அவரது புறக்கணிப்புக்கு காரணமாகக் கூறப்படுகிறது. ஹைதராபாத் அணிக்காக விளையாடிய அவர் 6 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்தார்; ஓவருக்கு 11 ரன்களுக்கு மேல் விட்டுக் கொடுத்தார்.
“சர்வதேச அணிக்குத் திரும்புவது தேர்வாளர்களின் கையில் உள்ளது. ஆனால் நான் எல்லா வடிவங்களிலும் விளையாடத் தயாராக இருக்கிறேன்” என்று ஷமி தெளிவுபடுத்தியுள்ளார்.