2025 ஐபிஎல் தொடரில் தொடக்கத்தில் தொடர்ச்சியான தோல்விகளை சந்தித்த மும்பை இந்தியன்ஸ் அணி, கடைசி இரண்டு போட்டிகளில் வெற்றியை பதிவு செய்து மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பி உள்ளது. இது அந்த அணியின் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வகையில் நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை எதிர்கொண்டது. மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் முதலில் பந்துவீசிய மும்பை அணி, சன்ரைசர்ஸ் அணியை 162 ரன்களுக்கு சுருட்டியது. பின்னர் 163 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய மும்பை இந்தியன்ஸ், 18.1 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியில் முக்கிய பங்காற்றியவர் வில் ஜேக்ஸ். பந்துவீச்சில் 3 ஓவர்கள் வீசி 14 ரன்கள் மட்டுமே வழங்கி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதே நேரத்தில், பேட்டிங்கில் மூன்றாவது இடத்தில் களமிறங்கி 26 பந்துகளில் 3 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர் உடன் 36 ரன்கள் எடுத்து ஆட்டநாயகன் விருதையும் பெற்றார்.
தொடரின் ஆரம்பத்தில் எதிர்பார்த்த அளவுக்கு விளையாடாத வில் ஜேக்ஸ், இப்போட்டி மூலம் தனக்கான மதிப்பை நிரூபித்தார். போட்டி முடிந்தபின், மும்பை கேப்டன் ஹார்திக் பாண்டியா கூறுகையில், “இது போன்ற அற்புதமான நேரங்களுக்காகத்தான் வில் ஜேக்ஸை நாங்கள் அணியில் வைத்திருக்கிறோம். அவரை தொடர்ந்து ஆதரித்து வருகிறோம். இன்று அவர் வெளிப்படுத்திய ஆட்டம் மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் ஒரு கம் ப்ளீட் பிளேயர் – ஃபீல்டிங், பந்துவீச்சு, பேட்டிங் என மூன்றிலும் நம்பிக்கையுடன் செயல்படக்கூடியவர்” என்று பாராட்டினார்.
மும்பை இந்தியன்ஸ் அடுத்த ஆட்டத்தில் ஏப்ரல் 20ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.