லக்னோ: மும்பை மற்றும் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிகளுக்கு இடையிலான இரானி கோப்பை தொடர் லக்னோவில் நடைபெற்றது. முதல் இன்னிங்சில் மும்பை 537 ரன்களும், ரெஸ்ட் ஆஃப் இந்தியா 416 ரன்களும் எடுத்தன.
121 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை விளையாடிய மும்பை அணி நேற்றைய கடைசி நாள் ஆட்டத்தை 78 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 329 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
தனுஷ் கோட்டியான் 150 பந்துகளில் ஒரு சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 114 ரன்களுடனும், மோஹித் அவஸ்தி 51 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். கடைசி அமர்வில் 451 ரன்களை சேஸ் செய்ய வேண்டும் என்ற இலக்குடன், ரெஸ்ட் ஆஃப் இந்தியா கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் போட்டியை டிராவில் முடிக்க ஒப்புக்கொண்டார்.
மும்பை அணி முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றதன் அடிப்படையில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இரானி கோப்பையை மும்பை வெல்வது இது 15-வது முறையாகும்.
இதனிடையே, தொடரில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த அணி தற்போது கோப்பையை வென்றுள்ளது. மும்பை அணி கடைசியாக 1997-98 சீசனில் பட்டம் வென்றது.
அதன்பிறகு, அவர்கள் இரானி கோப்பை இறுதிப் போட்டியில் 8 முறை விளையாடி கோப்பையை வெல்ல முடியவில்லை. மும்பை கடைசியாக 2015-16 சீசனில் இறுதிப் போட்டியில் விளையாடியது.