நியூசிலாந்து: முதல் போட்டியில் தோல்வி அடைந்த நிலையில் 2-வது போட்டியில் தென் ஆப்பிரிக்காவுக்கு ரிவென்ஜ் கொடுத்துள்ளது நியூசிலாந்து அணி.
தென் ஆப்பிரிக்கா- நியூசிலாந்து அணிகள் மோதிய 2-வது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தென் ஆப்பிரிக்கா அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி 91 ரன்களில் ஆல் அவுட் ஆகி படுதோல்வி அடைந்தது.
இதனையடுத்து இரு அணிகள் மோதிய 2-வது டி20 போட்டி இந்திய நேரப்படி இன்று காலை 6 மணிக்கு நடந்தது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக டேவான் கான்வே 60 ரன்கள் குவித்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் முல்டர் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனை தொடர்ந்து விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி நியூசிலாந்து அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறியது. அந்த அணியில் ஒருவர் மட்டுமே 20 ரன்களுக்கு மேல் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர்.
இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 15.3 ஓவரில் 107 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து தரப்பில் பெர்குசன், பென் சியர்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.