லண்டனில் நடைபெற உள்ள ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டிக்கு முன்பே இந்திய அணியின் பயிற்சிப் பங்கிலும் பரபரப்பான சூழல் நிலவியது. இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் காம்பிர் மற்றும் ஆடுகள பராமரிப்பாளர் லீ போர்டிஸ் இடையே காரசார வார்த்தை மோதல் ஏற்பட்டுள்ளது.
ஓவல் மைதானத்தில் இந்திய வீரர்கள் வலைப்பயிற்சி நடத்திய போது, காம்பிர், போட்டி நடைபெறவுள்ள ஆடுகளத்தை அருகிலிருந்து பார்வையிட்டார். இதற்கு ஆட்சேபனைக் கொண்ட போர்டிஸ், “2.5 மீட்டர் தூரத்தில் நின்று பாருங்கள்” எனத் தடுத்து நிறுத்தினார். இதையடுத்து காம்பிர், “நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைக் கூறும் உரிமை உங்களுக்கு இல்லை. நீங்கள் வெறும் பராமரிப்பாளர் தான்” என பதிலடி கொடுத்தார்.

போர்டிஸ், “இது பற்றி ஐ.சி.சி-க்கு புகார் கொடுக்க நேரிடும்” என எச்சரிக்கையுடன் பேச, காம்பிர் அதற்கு தாடி பதிலடி கொடுத்துள்ளார்: “வேண்டுமானால் யாரிடம் வேண்டுமானாலும் புகாரளியுங்கள்!”
வாக்குவாதம் தீவிரமடைந்த நிலையில், பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோடக் இருவரையும் சமாதானப்படுத்தினார். பின்னர் போர்டிஸுடன் தனியாக பேசிய கோடக், “நாங்கள் ஸ்பைக் இல்லாத ஷூ அணிந்தோம். ஆடுகளத்திற்கு எந்த சேதமும் ஏற்படாது” என உறுதி அளித்தார். மேலும், “இது 200 ஆண்டு பழமையான பொக்கிஷம் அல்ல, சாதாரண ஆடுகளமே” என சுடச்சுட பதிலடி கொடுத்தார்.
இங்கிலாந்துக்கு சலுகை?
இந்த விவகாரத்தில் முக்கிய குற்றச்சாட்டு – இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம், இயக்குநர் ராப் கீ ஆகியோர் இந்த ஆடுகளத்திற்கு அருகே செல்ல அனுமதிக்கப்படுவதில் எந்த தடையும் இல்லாமல் இருந்தது தான். ஆனால் இந்திய அணிக்கு மட்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
ஓவல் டெஸ்டில் வீரர் மாற்றம்
தயார் நிலையில் இருக்கும் வேகப்பந்துவீச்சாளர்களில் ஆகாஷ் தீப் புது வாய்ப்பு பெறலாம். பும்ரா இடம் பெறாவிட்டால், அர்ஷ்தீப் அல்லது பிரசித் கிருஷ்ணா இடம் பெறலாம். ஷர்துல் தாகூருக்கு பதிலாக குல்தீப் யாதவ் சேர்க்கப்பட வாய்ப்பு அதிகம். விக்கெட் கீப்பராக துருஷ் ஜுரல் விளையாடுவார்.