திண்டுக்கல்: டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரில் திருப்பூர் அணியிடம் 69 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்த நெல்லை அணி ‘பிளே-ஆப்’ வாய்ப்பை இழந்தது.
திண்டுக்கல், நத்தம் என்.பி.ஆர்., கல்லுாரி மைதானத்தில் நேற்று –
நடந்த டி.என்.பி.எல்., லீக் போட்டியில் திருப்பூர், நெல்லை அணிகள் மோதின. திருப்பூர் அணி ஏற்கனவே ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறியது. அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ள, வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் நெல்லை அணி களமிறங்கியது. ‘டாஸ்’ வென்ற நெல்லை அணி கேப்டன் அருண் கார்த்திக் ‘பவுலிங்’ தேர்வு செய்தார்.
திருப்பூர் அணிக்கு அமித் சாத்விக், துஷார் ரஹேஜா ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 65 ரன் சேர்த்த போது ராக்கி பாஸ்கர் பந்தில் சாத்விக் (41) அவுட்டானார். சோனு யாதவ் ‘வேகத்தில்’ ரஹேஜா (32) வெளியேறினார். பின் இணைந்த கேப்டன் சாய் கிஷோர், முகமது அலி ஜோடி நம்பிக்கை தந்தது. நான்காவது விக்கெட்டுக்கு 42 ரன் சேர்த்த போது சோனு யாதவ் பந்தில் முகமது அலி (20) போல்டானார். அபாரமாக ஆடிய சாய் கிஷோர் 31 பந்தில் அரைசதம் எட்டினார். இவர், 55 ரன்னில் (8 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஆட்டமிழந்தார்.
திருப்பூர் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 182 ரன் எடுத்தது. நெல்லை சார்பில் சோனு யாதவ் 3 விக்கெட் வீழ்த்தினார்.
கடின இலக்கை விரட்டிய நெல்லை அணிக்கு குருசாமி அஜிதேஷ் (28), ரித்திக் ஈஸ்வரன் (39) ஓரளவு கைகொடுத்தனர். அதிஷ் (17), சோனு யாதவ் (14) நிலைக்கவில்லை. கேப்டன் அருண் கார்த்திக் (2), அத்னன் கான் (1), சச்சின் ரதி (2) உள்ளிட்ட மற்றவர்கள் ஏமாற்றினர். நெல்லை அணி 19.4 ஓவரில் 113 ரன்னுக்கு சுருண்டு தோல்வியடைந்தது. திருப்பூர் சார்பில் நடராஜன் 3 விக்கெட் சாய்த்தார்.