இந்தியாவில் 2008 ஆம் ஆண்டிலிருந்து தொடங்கிய ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது, வருடம் தோறும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை பெற்று வருகிறது. 2025 ஆம் ஆண்டின் பதினெட்டாவது ஐபிஎல் தொடரும், எதிர்வரும் மார்ச் 22 ஆம் தேதி துவங்கி மே மாதம் 25 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த தொடரில் 10 அணிகள் பங்கேற்று கோப்பையை கைப்பற்ற பலப்பரிட்சை நடத்துகின்றன.
இந்த ஐபிஎல் தொடருக்கு முன்னதாக, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடந்த மெகா ஏலத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் 9.75 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டார். 2008 முதல் 2015 வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய அஸ்வின், அதன் பிறகு பல்வேறு அணிகளுக்கு விளையாடி, சில ஆண்டுகள் பஞ்சாப் அணிக்காக கேப்டன்சியும் செய்திருந்தார். தற்போது 38 வயதாகும் அவர், சர்வதேச போட்டியிலிருந்து ஓய்வு பெற்ற நிலையில், மீண்டும் 10 ஆண்டுகள் கழித்து சென்னை அணிக்காக விளையாட ஒப்பந்தமாகி உள்ளார்.
சென்னையில் நடைபெற்று வரும் சிஎஸ்கே அணியின் பயிற்சி முகாமில் கலந்து கொண்ட அஸ்வின், மீண்டும் தனது பழைய அணிக்காக விளையாடுவது குறித்து சில கருத்துக்களை வெளியிட்டார். அவர் கூறியதாவது, “உண்மையில் இது மிகவும் வித்தியாசமான உணர்வாக இருக்கிறது. நான் இங்கிருந்து வெளியேறி பல ஆண்டுகள் ஆகிவிட்டதால், இப்போது அதே அணிக்கு திரும்பி உள்ளேன் என்றால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்த சீசனில் மிகவும் வெறித்தனமாக பயிற்சி செய்து வருகிறேன்.”
அஸ்வின், “சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடும் நாளை நோக்கி நான் ஆவலாக காத்திருக்கிறேன்,” என்றும் கூறினார். இந்த சீசனில் சென்னை அணி தங்களது முதல் லீக் போட்டியில் மும்பை அணியை எதிர்த்து மார்ச் 23 ஆம் தேதி விளையாட உள்ளதாக குறிப்பிடத்தக்கது.