கடந்த ஆண்டு நடைபெற்ற 2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடரை கைப்பற்றிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, நடப்பு சாம்பியனாக நேற்று மார்ச் 22ஆம் தேதி 2025 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் பெங்களூரு அணியை எதிர்த்து விளையாடியது. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்களை மட்டுமே குவித்தது.

அதனைத் தொடர்ந்து 175 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி, 16.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 177 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் கொல்கத்தா அணி முதல் 10 ஓவர்களில் 100 ரன்களை கடந்தபோதும், அதற்கடுத்த பத்து ஓவர்களில் அடிக்கடி விக்கெட்டுகளை இழந்து சரிவை நோக்கி பயணித்தது.
கொல்கத்தா அணியின் நம்பிக்கை நட்சத்திர வீரர்களாக கருதப்பட்ட வெங்கடேஷ் ஐயர், ரிங்கு சிங், ஆண்ட்ரே ரசல், ரமன்தீப் சிங் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால், அந்த அணியின் ரன் குவிப்பு வேகம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதன் காரணமாகவே அவர்கள் தோல்வியை சந்தித்தனர்.
இந்த நிலையில், நேற்றைய போட்டியில் 10 பந்துகளை சந்தித்து ஒரு பவுண்டரியுடன் 12 ரன்கள் மட்டுமே எடுத்த ரிங்கு சிங்கின் மோசமான ஆட்டத்தை இந்திய அணியின் முன்னாள் வீரர் விரேந்தர் சேவாக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், “ரிங்கு சிங் இந்த போட்டியில் ஆட்டமிழந்த விதம் மிகவும் மோசமானது. அந்த பந்து அடிப்பதற்கான பந்தே கிடையாது. அவரது தவறான ஷாட் செலக்ஷன் காரணமாகவே அவர் விக்கெட்டை எளிதாக பறிகொடுத்தார்” என்று கூறினார்.
மேலும், “அவர் விளையாடும் விதத்தை பார்க்கும்போது ரசிகர்களே அவர் அவுட் ஆக வேண்டும் என்று நினைப்பார்கள். ஏனென்றால், அவரது பின்னர் ரசல் பேட்டிங் செய்ய வருவார் என்பதால், ரசிகர்கள் கூட ரிங்கு அவுட் ஆவதையே விரும்புவார்கள்” என்று சேவாக் கடுமையாக விமர்சித்தார்.
2023 ஐபிஎல் சீசனில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை வெகுவாக கவர்ந்த ரிங்கு சிங், கடந்த ஆண்டு சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார். இந்த ஆண்டும் அவர் மோசமான தொடக்கத்தையே சந்தித்துள்ளார்.
கொல்கத்தா அணியின் முதலில் அபார துவக்கம் கிடைத்த போதிலும், மிடில் ஆடர் பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்தது அந்த அணியின் ரன் வேகத்தைக் குறைத்து, பெங்களூரு அணிக்கு வெற்றியை வசப்படுத்தி கொடுத்தது.
இந்த தோல்வியால் கொல்கத்தா அணி இந்த தொடரை மோசமான முறையில் தொடங்கியுள்ளது. ரிங்கு சிங் போன்ற முக்கிய பேட்ஸ்மேன்கள் மிடில் ஆடரில் சிறப்பாக செயல்படாமல் இருப்பதே அந்த அணிக்கு பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது.