டெல்லி: பாரீஸ் பாராலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய வீரர்களுக்கு தலா ரூ.75 லட்சம் பரிசுத் தொகையை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வழங்கினார்.
வெள்ளிப் பதக்கம் வெல்பவர்களுக்கு ரூ.50 லட்சமும், வெண்கலப் பதக்கம் வென்றவர்களுக்கு ரூ.30 லட்சமும் பரிசாக வழங்கப்படும். பாரிஸில் கடந்த 8-ம் தேதி முடிவடைந்த பாராலிம்பிக் போட்டியில் இந்தியா 7 தங்கம், 9 வெள்ளி, 13 வெண்கலம் என 29 பதக்கங்களை வென்று பதக்க பட்டியலில் 18-வது இடம் பிடித்தது.
இந்நிலையில், பதக்கம் வென்ற பெரும்பாலான இந்திய வீரர்கள் நேற்று நாடு திரும்பினர். டெல்லி விமான நிலையத்தில் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பிரமாண்ட பாராட்டு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, “பாராலிம்பிக்ஸ் மற்றும் பாரா ஸ்போர்ட்ஸில் நாடு வளர்ந்து வருகிறது.
2016-ல் 4 பதக்கங்களை வென்ற இந்தியா, டோக்கியோவில் 19 பதக்கங்களையும், பாரிஸில் 29 பதக்கங்களையும் பெற்று 18-வது இடத்தைப் பிடித்தது. 2028-ல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற உள்ள பாராலிம்பிக் போட்டியில் இந்தியா அதிக பதக்கங்களை வெல்லும்.
வீரர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்படும்,” என்றார். நிகழ்ச்சியில், பாரிஸ் பாராலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவர்களுக்கு தலா ரூ.75 லட்சமும், வெள்ளிப் பதக்கம் வென்றவர்களுக்கு தலா ரூ.50 லட்சமும், வெண்கலப் பதக்கம் வென்றவர்களுக்கு தலா ரூ.30 லட்சமும் பரிசுத் தொகையை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வழங்கினார்.