கிரிக்கெட்டின் கடவுளாக போற்றப்படும் சச்சின் டெண்டுல்கர் உலகின் சிறந்த பவுலர்களை எதிர்கொண்டு அதிரடியாக ஆடியவர். ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்ன், க்ளென் மெக்ராத், பாகிஸ்தானின் வாசிம் அக்ரம், மேற்கிந்திய தீவுகளின் கோர்ட்னி வால்ஷ் ஆகியோரை தன்னுடைய ஆட்டத்தால் பின்னுக்கு இழுத்தவர். ஆனாலும் இவர்களில் யாரும் சச்சினுக்கு பயத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால் ஒருவர் மட்டும் அவரை திகைக்க வைத்துள்ளார். அவர் வேறு யாரும் இல்லை, தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் ஹன்சி க்ரோன்ஜே.

சச்சினே தன்னை பயமுறுத்திய ஒரே பவுலர் ஹன்சி க்ரோன்ஜேவாக இருப்பதாக நேரடியாக கூறியிருக்கிறார். “ஒரு விக்கெட்டில் ஆலன் டொனால்ட், இன்னொரு விக்கெட்டில் ஹன்சி க்ரோன்ஜே பந்து வீசியால், நான் ஆலனை எதிர்கொள்கிறேன், நீ ஹன்சியை சமாளி” என்று தனது கூட்டாளிக்கு எச்சரிக்கை செய்வதாக கூறியிருக்கிறார் சச்சின். ஏனெனில், ஹன்சி பந்துவீசியபோது ஃபிளிக் அடிக்க முயற்சித்ததிலோ, சாமர்த்தியமாக கவர் பக்கத்தில் விளையாட நினைத்ததிலோ சிக்கி, எப்போதும் விக்கெட் இழந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவில் விளையாடியபோது ஹன்சி க்ரோன்ஜேவால் தான் அடிக்கடி அவுட்டாகியதாகவும், அவர் பந்து வீச வந்தால் ரன் எடுக்க முடியாமல் சிக்கிக்கொண்டதாகவும் சச்சின் கூறுகிறார். டர்பனில், டொனால்ட் மற்றும் ஷான் பொல்லாக்கை எதிர்த்து சர்வசாதாரணமாக ஆடியிருந்தாலும், ஹன்சி வந்தவுடன் விக்கெட்டை இழந்தது அவரை உள்ளுக்குள் கலங்கவைத்ததாகவும் அவர் நினைவுகூர்கிறார்.
துரதிர்ஷ்டவசமாக, ஹன்சி க்ரோன்ஜேவின் விளையாட்டு வாழ்க்கை மிக விரைவில் முடிவுக்கு வந்தது. இருந்தாலும், அவருடன் மோதிய அந்த சில தருணங்களை மறக்க முடியாது என்கிறார் சச்சின். ஒருநாள் போட்டிகளில் ஹன்சி, சச்சினை மூன்று முறை மட்டுமே வீழ்த்தியிருக்கிறார் என்றாலும், 11 டெஸ்ட் போட்டிகளில் ஐந்து முறை அவுட் செய்துள்ளா என்பது இந்த அச்சத்தின் உண்மையை நன்கு வெளிப்படுத்துகிறது.