மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் இளம் நட்சத்திர வீரர் சுப்மன் கில், தனது ரோல் மாடல்களைப் பற்றி பேசியுள்ளார். இந்திய பேட்டிங் வரிசையில் சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி ஆகியோர் தலைமுறைகளை வழிநடத்தியவர்கள். தற்போது அவர்களின் பாதையைத் தொடர்ந்து வருபவராக கில் பார்க்கப்படுகிறார்.
சமீபத்திய பேட்டியில் கில், “எனக்கு இரண்டு ரோல் மாடல்கள் இருந்தனர். முதலாவது சச்சின் டெண்டுல்கர். அவர் என் அப்பாவுக்கு பிடித்தவர். அதனால் தான் நான் கிரிக்கெட்டில் வந்தேன். 2011-2013 காலத்தில் அவரை பார்த்து விளையாட்டின் மனநிலை, தொழில்நுட்பம் ஆகியவற்றை உணர்ந்தேன். அவர் 2013-ல் ஓய்வு பெற்றார்” என்று கூறினார்.

மேலும் அவர், “அந்த நேரத்தில் நான் விராட் கோலியை நெருங்கிப் பின்தொடர ஆரம்பித்தேன். அவரது ஆட்ட பசி, தீவிரம், தன்னலம் பாராத உழைப்பு என அனைத்தும் எனக்கு ஊக்கமாக இருந்தது. திறமைகள் கற்றுக்கொள்ளலாம், ஆனால் பசி உங்கள் உள்ளிருந்து வர வேண்டும். விராட்டிடம் அது எப்போதும் மிகுதியாக இருந்தது” என்று தெரிவித்தார்.
இதேவேளை, சச்சின் மகள் சாரா டெண்டுல்கரை கில் காதலிக்கிறார் என்ற வதந்திகள் முன்பு கிளம்பியிருந்தன. அதையடுத்து, கில்லின் இந்தப் பேட்டியை குறிப்பிட்டு, “வருங்கால மாமனாரையே ரோல் மாடலாகக் கொண்டிருக்கிறாரா?” என்று ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர். தற்போது ஆசியக் கோப்பையில் கில் இந்திய அணியின் முக்கிய ஆயுதமாக கருதப்படுகிறார். எமிரேட்ஸுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் அவர் 9 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அடுத்ததாக, இந்தியா-பாகிஸ்தான் மோதல் செப்டம்பர் 14ஆம் தேதி துபாயில் நடைபெறுகிறது.