இந்திய டெஸ்ட் அணியில் தமிழக வீரர் சாய் சுதர்சன் இடம் பெற உள்ளார் என்ற தகவல் வெளியானது. ரோகித் சர்மா ஓய்வு பெற்றதால் துவக்க வீரராக ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பும் வகையில் பிசிசிஐ இந்த முடிவை எடுத்துள்ளது. தற்போதைய துவக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் சேர்ந்து சாய் சுதர்சன் போட்டியில் அடுத்த நிலைக்கு செல்ல உள்ளார்.

2025 ஐபிஎல் சீசனில் சாய் சுதர்சன் சிறப்பாக விளையாடி 11 போட்டிகளில் 509 ரன்கள் எடுத்துள்ளார். டி20 போட்டியாக இருந்தாலும், அவரது சீரான பேட்டிங் பாணி, நேர்த்தியான ஆட்டம் டெஸ்ட் போட்டிகளுக்கும் ஏற்றதாக காணப்படுகிறது. முன்னாள் வீரர்களும் அவரது திறமையை புகழ்ந்து கருத்து தெரிவித்துள்ளனர்.
தொடர்ச்சியான செயல்திறன், விக்கெட்டை எளிதில் இழக்காத ஆட்டநடை ஆகியவை அவரை தேர்வுக்குழுவின் பார்வையில் உயர்த்தியுள்ளன. இந்தியா அடுத்து இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் பங்கேற்கவுள்ளது. இங்கிலாந்து நிலத்தில் சாய் சுதர்சன் கடந்த இரண்டு ஆண்டுகளாக கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடிய அனுபவம் இவருக்கு மிகப் பெரிய ஆதாயமாக அமைந்துள்ளது.
சர்ரே அணிக்காக ஆடிய அனுபவம், அங்குள்ள பிச்சுகளையும் சூழலையும் நன்கு புரிந்தவராக மாறி உள்ளார். இது இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் அவருக்கு பலமாக இருக்கும்.தமிழகத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் அணியிலிருந்து ஓய்வு பெற்ற நிலையில், மற்றொரு தமிழக வீரரான சாய் சுதர்சன் அவரது இடத்தை நிரப்ப போவதாக பார்க்கப்படுகிறது. வாஷிங்டன் சுந்தருக்கு இடமிருந்தாலும் அவர் நிலைத்த இடத்தைப் பெறவில்லை.இந்த சூழ்நிலையில் சாய் சுதர்சன் ஒரு முக்கியமான வீரராக இந்திய டெஸ்ட் அணியில் புதிய பாதையை துவக்க உள்ளார்.