இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் தனது கணவர் பாருபள்ளி காஷ்யப்பை விட்டு பிரியும் முடிவை எடுத்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். 2018ஆம் ஆண்டு காதலால் கட்டுப்பட்ட இந்த ஜோடி, தங்களின் திருமண வாழ்கையை இன்று முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. இருவரும் ஹைதராபாத்தில் உள்ள புல்லேலா கோபிசந்த் அகாடமியில் பயிற்சி பெற்று, இந்திய பேட்மிண்டன் உலகத்தில் முக்கிய வீரர்களாக திகழ்ந்தனர்.

சாய்னா நேவால் தனது சர்வதேச சாதனைகளில் ஒலிம்பிக் வெண்கல வெற்றியையும், உலகின் நம்பர் ஒன் வீராங்கனை என்ற அந்தஸ்தையும் பெற்றவர். பாருபள்ளி காஷ்யப்பும் காமன்வெல்த் போட்டிகளில் இந்தியாவுக்காக தங்கம் வென்றவர். இருவரும் பேட்மிண்டன் உலகத்தில் சாதனை படைத்தவர்கள் என்றாலும், வாழ்க்கையின் மற்ற பகுதியான தம்பதியுறவில் அவர்கள் இணைந்து பயணிக்க முடியவில்லை என்பது சோகமளிக்கிறது.
சாய்னா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “வாழ்க்கை எப்போது எங்களை வெவ்வேறு திசையில் அழைத்து செல்லும் என்பதை யாரும் சொல்ல முடியாது. பல சிந்தனைகளுக்குப் பிறகு, நாங்கள் இருவரும் பிரிந்தே வாழ்வது நல்லது என முடிவெடுத்தோம். மன நிம்மதி மற்றும் தனிப்பட்ட வளர்ச்சிக்காக இந்த முடிவை எடுத்துள்ளோம். எங்களின் தனியுரிமைக்கு மதிப்பளிக்க அனைவரும் தயவுசெய்து ஒத்துழைக்க வேண்டுகிறேன்” என்று பதிவு செய்தார்.
தங்களது உறவை முறித்துக்கொண்டாலும், இதற்கு காரணமாக எந்தவொரு வாதம் அல்லது பெரிய பிரச்சனையும் இல்லாமல், சிறப்பான முறையில் முடிவுக்கு வந்துள்ளனர். இருவரும் தனித்தனியாக வாழ்க்கையை எதிர்கொள்ள முடிவெடுத்துள்ளனர். இது ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை கொடுத்தாலும், அவர்களின் விருப்பத்தைக் கெளரவிப்பது மிகவும் அவசியம். இவர்களது தனிமனித வாழ்க்கையில் நிம்மதியும், வெற்றியும் தொடர வாழ்த்துக்கள்.