மும்பை: ஆஸ்திரேலியா ‘ஏ’ கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இந்தியா ‘ஏ’ அணிக்கு எதிராக 2 அதிகாரப்பூர்வமற்ற 4 நாள் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் போட்டி 16 முதல் 19 வரை லக்னோவில் உள்ள எகானா மைதானத்தில் நடைபெறும்.
இரண்டாவது டெஸ்ட் போட்டி 23 முதல் 26 வரை அதே மைதானத்தில் நடைபெறும். இந்தத் தொடருக்கான இந்திய ‘ஏ’ அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் மற்றும் ஆசிய கோப்பை டி20 தொடருக்கான இந்திய அணிக்குத் தேர்வு செய்யப்படாத ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டின் போது காயமடைந்த கருண் நாயர் சேர்க்கப்படவில்லை.

இதற்கிடையில், காயம் காரணமாக தொடரில் இருந்து விலகிய நிதிஷ் குமார் ரெட்டி சேர்க்கப்பட்டுள்ளார். மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு தயாராகும் வகையில் மூத்த வீரர்கள் கே.எல். ராகுல் மற்றும் முகமது சிராஜ் இரண்டாவது போட்டியில் மட்டுமே விளையாடுவார்கள். விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் துருவ் ஜூரெல் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் நாராயணன் ஜெகதீசனும் அணியில் இடம் பெற்றுள்ளார். ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), அபிமன்யு ஈஸ்வரன், நாராயணன் ஜெகதீசன், சாய் சுதர்ஷன், துருவ் ஜூரெல், தேவ்தத் படிக்கல், ஹர்ஷ் துபே, ஆயுஷ் பதோனி, நிதிஷ் குமார் ரெட்டி, தனுஷ் கோட்டியன், பிரசித் கிருஷ்ணா, குர்னூர் பிரார், கலீல் அகமது, மானவ் சுதர், யாஷ் தாக்குர்.