
தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கெபியில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் தென்னாப்பிரிக்கா 358 ரன்களும், இலங்கை 328 ரன்களும் எடுத்தன. மூன்றாவது நாள் முடிவில் தென்னாப்பிரிக்க அணி இரண்டாவது இன்னிங்சில் 191/3 ரன்கள் எடுத்திருந்தது.
நான்காவது நாளில் தென் ஆப்பிரிக்க கேப்டன் பவுமா அரைசதம் எட்டினார். நான்காவது விக்கெட்டுக்கு 104 ரன்கள் சேர்த்த நிலையில், ஸ்டப்ஸ் (47) ஆட்டமிழந்தார். பவுமா 66 ரன்களில் ஆட்டமிழந்தார். டேவிட் பெடிங்ஹாம் (35) ஓரளவு பங்களித்தார். தென்னாப்பிரிக்கா இரண்டாவது இன்னிங்சில் 317 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இலங்கை தரப்பில் பிரபாத் ஜெயசூர்யா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் 348 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணிக்கு தினேஷ் சந்திமால் (29), மேத்யூஸ் (32), கமிந்து மெண்டிஸ் (35) ஆகியோர் தாக்குப்பிடிக்கவில்லை.
ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்து 143 ரன்கள் பின்தங்கியுள்ளது. இலங்கை கேப்டன் தனஞ்சய டி சில்வா (39), குசல் மெண்டிஸ் (39) அவுட்டாகாமல் இருந்தனர்.