மும்பை: 2025 ஆசியக் கோப்பை தொடருக்கான இந்திய டி20 அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்ட சுப்மன் கில், சில நாட்களிலேயே உடல்நலக் குறைவு காரணமாக துலீப் டிராபி தொடரிலிருந்து விலகியுள்ளார். இந்தச் சம்பவம் கிரிக்கெட் உலகில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
பெங்களூருவில் ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 15 வரை நடைபெறவிருந்த துலீப் டிராபியில், வடக்கு மண்டல அணியின் கேப்டனாக கில் தேர்வானார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 700க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்து பிரகாசித்த அவர், இந்த உள்ளூர் தொடரிலும் அதே ஆட்டத்தை தொடர்வார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் திடீரென விலகியதால், வடக்கு மண்டல அணிக்கு இது பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ஆசியக் கோப்பை இந்திய அணியில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்ட கில், ரசிகர்களிடையே பெரும் கவனத்தை பெற்றிருந்தார். அவரின் விலகல், “ஓய்வு தேவைப்படுகிறதா அல்லது வேறு காரணமா?” என்ற சந்தேகங்களை கிளப்பியுள்ளது.
தற்போது சண்டிகரில் ஓய்வில் இருக்கும் கில், உடல் சோர்வும் வைரஸ் காய்ச்சலும் காரணமாக பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. மருத்துவர்கள் அவர் விரைவில் குணமடைவார் என கூறினாலும், ஆசியக் கோப்பை நெருங்கி வருவதால் பிசிசிஐ அவர் ஓய்வில் இருப்பதையே விரும்புகிறது.
கில் இல்லாத நிலையில், வடக்கு மண்டல அணியை அங்கித் குமார் வழிநடத்துவார் என கூறப்படுகிறது. இதே சமயம், சில மாதங்களுக்கு முன்பு வீரர்கள் உள்ளூர் போட்டிகளில் விளையாடினால் மட்டுமே இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கில் விலகல் விவாதத்தை அதிகரித்துள்ளது.
பிசிசிஐ இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பொன்றும் வெளியிடாத நிலையில், ரசிகர்கள் “கில் நிலைமை எவ்வளவு கடுமையானது?” என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர். அவரின் ரத்த பரிசோதனை முடிவுகள் பெரும் பிரச்சினையில்லை என்று தெரிவிக்கப்பட்டாலும், ஓய்வு அவசியம் என மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த சூழ்நிலையில், சுப்மன் கில் ஆசியக் கோப்பைக்குத் தயாராக இருப்பாரா என்ற கேள்வி கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.