லண்டன்: லார்ட்ஸ் டெஸ்டில் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் அணிந்த ஜெர்சி ரூ. 5.41 லட்சம் என்ற அதிக விலையில் ஏலம் போனது. இங்கிலாந்து முன்னாள் கேப்டன் ஆன்ட்ரூ ஸ்டிராஸ், நுரையீரல் புற்றுநோயால் மரணமடைந்த தனது மனைவி ருத் நினைவாக “ரெட் பார் ரூத்” என்ற அறக்கட்டளையை நடத்தி வருகிறார். இந்த அறக்கட்டளை, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவியை வழங்குகிறது.

இந்த முயற்சிக்காக, ஜூலை 11 அன்று நடைபெற்ற இந்தியா-இங்கிலாந்து 3வது டெஸ்டின் இரண்டாவது நாளில், இரு அணியினரும், அம்பயர்களும், ரசிகர்களும் ‘பிங்க்’ நிற தொப்பி, உடை அணிந்து ஆதரவு தெரிவித்தனர். அப்போது பயன்படுத்திய ஜெர்சி, தொப்பி, பேட் உள்ளிட்ட பொருட்கள் ஏலத்திற்கு வைக்கப்பட்டன.
இந்திய வீரர்கள் பயன்படுத்திய பொருட்களுக்கு அதிக விலை கிடைத்தது. சுப்மன் கில் ஜெர்சி ரூ. 5.41 லட்சம், பும்ரா மற்றும் ஜடேஜா ஜெர்சிகள் தலா ரூ. 4.94 லட்சம், ராகுல் ஜெர்சி ரூ. 4.70 லட்சம் பெற்றது. இங்கிலாந்து வீரர்களில் ஜோ ரூட் ஜெர்சி ரூ. 4.47 லட்சம், ஸ்டோக்ஸ் ஜெர்சி ரூ. 4 லட்சம் விலையில் விற்கப்பட்டது.
மேலும், இந்திய வீரர் ரிஷாப் பன்ட் அணிந்திருந்த தொப்பி ரூ. 1.76 லட்சத்திற்கு விற்கப்பட்டது. இந்த ஏலம், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதி உதவியாக பயன்படுத்தப்படும் என ஸ்டிராஸ் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.