ஆசியக்கோப்பை டி-20 கிரிக்கெட் தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் ஆகியவை ஏ பிரிவிலும், இலங்கை, ஆப்கானிஸ்தான், ஹாங்காங், வங்கதேசம் ஆகியவை பி பிரிவிலும் இடம்பிடித்துள்ளன. முதல் போட்டியில் இந்தியா, ஐக்கிய அரபு அமீரகத்தை எளிதில் வீழ்த்தி வெற்றியை பதிவு செய்தது. இதனால் அடுத்த கட்டமாக வரும் 14ஆம் தேதி நடைபெறவுள்ள இந்தியா – பாகிஸ்தான் மோதல் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

ஆனால், அந்தப் போட்டியை தடை செய்ய வேண்டும் என கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மனுதாரர்கள், பஹல்காம் தீவிரவாதத் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூருக்குப் பின் இந்தியா–பாகிஸ்தான் போட்டி நடப்பது தேச நலனுக்கு ஏற்றதல்ல என வாதிட்டனர். இப்படியான போட்டி, உயிர்நீத்த குடிமக்களின் தியாகத்தை அவமதிப்பதாக இருக்கும் என்றும் கூறினர். இதனால் மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.
அவ்வாறு தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதிகள், இதில் அவசர நிலை எதுவும் இல்லை எனக் குறிப்பிட்டனர். “போட்டி திட்டமிட்டபடி நடைபெறட்டும்” எனவும், விளையாட்டை அரசியல் சூழலுடன் இணைத்து பார்க்க வேண்டாம் எனவும் நீதிமன்றம் தெரிவித்தது. மேலும், பொதுநல மனுக்கள் மூலம் தேசிய அணி விளையாட்டை நிறுத்துவது சாத்தியமற்றது என்பதையும் வலியுறுத்தியது. இதன் மூலம் இந்தியா–பாகிஸ்தான் மோதல் தடை செய்யப்படாது என்பது உறுதியாகியுள்ளது.
இந்த தீர்ப்புக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் ரசிகர்களில் உற்சாகம் நிலவுகிறது. இந்திய அணி சிறப்பாக துவக்கி வைத்திருக்கும் நிலையில், பாகிஸ்தானை எதிர்கொள்ளும் போட்டியில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. இரு அணிகளின் மோதல் எப்போதும் சுவாரஸ்யமாக இருக்கும் என்பதால், இந்த ஆட்டத்தை உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் ஆவலுடன் காத்திருக்கின்றனர். நீதிமன்றத் தீர்ப்பால் எந்தத் தடையும் இல்லாமல் கிரிக்கெட் திருவிழா நடைபெற உள்ளது.