இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணத்துக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் நான்காவது ஆட்டம் ஜூலை 23ஆம் தேதி மான்செஸ்டரில் தொடங்கவுள்ளது. தற்போது தொடரில் 2–1 என்ற முன்னிலையுடன் இங்கிலாந்து திகழ்கிறது. இதற்கு முந்தைய டெஸ்ட் தொடர்கள் ‘பட்டோடி கோப்பை’ என அழைக்கப்பட்டன. ஆனால் தற்போது, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் புதிய மாற்றமாக ‘டெண்டுல்கர் – ஆண்டர்சன் கோப்பை’யை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த புதிய கோப்பையின் பெயர் கிரிக்கெட் உலகில் இரு மாபெரும் வீரர்களின் பெயர்களைக் கொண்டுள்ளது. டெஸ்ட் மற்றும் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக போட்டிகள் விளையாடிய மற்றும் அதிக ரன்கள் குவித்த இந்திய இக்கானிக் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரும், டெஸ்ட் கிரிக்கெட்டில் மிக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சனும் இணைந்து இந்த பெருமைக்குரிய கவுரவத்தை பெற்றுள்ளனர்.
சச்சினுடன் தன் பெயர் இணைந்து புதிய கோப்பையின் பெயராக இருப்பது மிகப்பெரிய பெருமை என ஆண்டர்சன் உருக்கமாக தெரிவித்துள்ளார். “ஒரு கோப்பை உங்கள் பெயரில் இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால், கிரிக்கெட்டில் நான் எப்போதும் பாராட்டும் சச்சினுடன் என் பெயரையும் இணைத்து ஒரு கோப்பை உருவாக்கியுள்ளனர் என்பதை நம்பவே முடியவில்லை,” என ஆண்டர்சன் ஸ்கை ஸ்போர்ட்ஸிடம் கூறியுள்ளார்.
“நான் குழந்தையாக இருக்கும்போது அவரை பார்த்தேன். அவருக்கு எதிராக விளையாடும் வாய்ப்பும் கிடைத்தது. இந்தியா என்ற ஒரு பெரிய நாடின் எதிர்பார்ப்புகளை தன் தோளில் சுமந்தவர் சச்சின். அவருடன் என் பெயர் இணைப்பது என் வாழ்க்கையின் மிகப்பெரிய கௌரவம்,” என கூறிய அவர், தனது உணர்ச்சிகளை நேரடியாக பகிர்ந்துள்ளார்.