ஐதராபாத்: வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இந்திய அணி டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றியது.
இதையடுத்து சர்வதேச டி20 கிரிக்கெட் தொடர் தொடங்கியது. குவாலியரில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நேற்று முன்தினம் டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் 2-வது டி20 போட்டி நடந்தது.
முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் எடுத்தது. சஞ்சு சாம்சன் 10, அபிஷேக் சர்மா 15, கேப்டன் சூர்யகுமார் யாதவ் 8, ஹர்திக் பாண்டியா 32, ரியான் பராக் 15, அர்ஷ்தீப் சிங் 6 ரன் எடுத்தனர்.
நிதீஷ் ரெட்டி அதிரடியாக விளையாடி 34 பந்துகளில் 4 பவுண்டரிகள், 7 சிக்சர்களுடன் 74 ரன்கள் எடுத்தார். அவருடன் இணைந்து விளையாடிய ரிங்கு சிங் 29 பந்துகளில் 5 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 53 ரன்கள் எடுத்தார்.
அதன்பின் 222 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய வங்கதேச அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து இந்திய அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வங்கதேச அணியில் அதிகபட்சமாக மஹ்மதுல்லா 41 ரன்கள் எடுத்தார். இந்திய தரப்பில் நிதிஷ் ரெட்டி, வருண் சக்ரவர்த்தி தலா 2 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங், வாஷிங்டன் சுந்தர், அபிஷேக் சர்மா, மயங்க் யாதவ், ரியான் பராக் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
அதன்பின் டி20 தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்நிலையில், இந்த தொடரின் கடைசி மற்றும் 3-வது டி20 போட்டி நாளை (அக்டோபர் 12) ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.
இந்திய அணி இந்த போட்டியிலும் வெற்றி பெற்று முழு டி20 தொடரையும் 3-0 என கைப்பற்ற முனைப்புடன் செயல்படும். அதே சமயம், கடைசி போட்டியில் ஆறுதல் வெற்றியை பெற வங்கதேச அணி அதிக கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.