ஒலிம்பிக் : டேபிள் டென்னிஸ் அணி பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ருமேனியாவை இந்தியா எதிர்கொண்டது. இதில் இந்திய மகளிர் அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது. முதல் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் ஸ்ரீஜா அகுலா – அர்ச்சனா காமத் ஜோடி 11-9, 12-10, 11-7 என்ற நேர் செட்களில் ஆதினா டியாகோனு-எலிசபெத் சமாரா ஜோடியை வீழ்த்தியது.
தொடர்ந்து நடைபெற்ற ஒற்றையர் ஆட்டத்தில் இந்தியாவின் மனிகா பத்ரா 11-5, 11-7, 11-7 என்ற செட் கணக்கில் பெர்னாடெட் சவுக்ஸை தோற்கடித்தார். இதனால் இந்திய அணி 2-0 என முன்னிலை பெற்றது. ஆனால் ருமேனியா அடுத்த இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது.
ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஜா அகுலா 11-8, 4-11, 11-7, 6-11, 8-11 என்ற செட் கணக்கில் எலிசபெட்டா சமாராவிடம் தோல்வியடைந்தார். அடுத்த ஆட்டத்தில் அர்ச்சனா காமத் 5-11, 11-8, 7-11, 9-11 என்ற செட் கணக்கில் பெர்னாடெட் சவுக்ஸிடம் வீழ்ந்தார். இதனால் ஆட்டம் 2-2 என சமனில் முடிந்தது. வெற்றியைத் தீர்மானிக்கும் இறுதி ஒற்றையர் ஆட்டத்தில் மனிகா பத்ரா 11-5, 11-9, 11-9 என்ற செட் கணக்கில் ஆதினா டியாகோனுவை வீழ்த்தினார்.
முடிவில் இந்திய அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது. காலிறுதியில் இந்திய அணி அமெரிக்கா அல்லது ஜெர்மனியை எதிர்கொள்கிறது.