ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சியின்கீழ் சர்ச்சைகள் தொடர்ந்து எழுந்து வரும் நிலையில், அங்கு முக்கியத் தலைவரான அனாஸ் ஹக்கானி, இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலியை குறித்துப் பரபரப்பான கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். தீவிர கிரிக்கெட் ரசிகரான ஹக்கானி, கோலியும் ரோஹித் சர்மாவும் மே 2025ல் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்ததை ஆச்சரியத்துடன் ஏற்றுக்கொண்டதாக கூறியுள்ளார்.

கோலியின் ஓய்வு முடிவை அவர் விமர்சித்து, அதை வாபஸ் பெற வேண்டும் என்றும், கோலி 50 வயது வரை தொடர்ந்து விளையாட வேண்டும் என்பதே தனது ஆசை என்றும் தெரிவித்துள்ளார். “ரோஹித்தின் ஓய்வு நியாயமானதாக இருக்கலாம், ஆனால் கோலியின் ஓய்வுக்குப் பின்னால் உள்ள காரணம் புரியவில்லை. உலகில் கோலி போன்றவர்கள் மிகக் குறைவு,” என ஹக்கானி வலியுறுத்தினார்.
36 வயதில் ஓய்வு அறிவித்த கோலி, 10,000 டெஸ்ட் ரன்களை எட்ட 770 ரன்கள் மட்டுமே பாக்கி இருந்த நிலையில் விலகினார். இதுவே அவரது ரசிகர்களையும் விமர்சகர்களையும் அதிர்ச்சி அடையச் செய்தது. ரோஹித்தின் ஓய்வும் அதற்கு சில நாட்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டதால், இருவரின் முடிவும் இந்திய அணியின் தலைமுறைக்கே மாற்றத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சுப்மன் கில் டெஸ்ட் அணியின் கேப்டனாக பொறுப்பேற்று இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் அழுத்தத்தையும் சமாளித்து 2-2 என சமநிலையை ஏற்படுத்தினார். கோலி மற்றும் ரோஹித் தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்கள். தாலிபான் தலைவரின் இந்த கருத்துகள், இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே கலவையான பிரதிபலிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.