இந்தியாவின் பெருமை சேர்த்த ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்று வரலாறு படைத்தார். இதன் மூலம், ஒலிம்பிக்கில் தடகள துறையில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றார். அதன் பின், 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கமும் வென்று நாட்டை பெருமைப்பட வைத்தார்.
இந்நிலையில், அவரது தனிப்பட்ட வாழ்க்கையிலும் ஒரு தகவல் வெளிவந்துள்ளது. நீரஜ் சோப்ரா இந்த வருடத்தின் தொடக்கத்தில் ஹிமானி மோர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஹிமாச்சல் பிரதேசத்தில் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் இவர்களின் திருமணம் நடைபெற்றது.

ஹரியானாவைச் சேர்ந்த ஹிமானி மோர், சிறந்த டென்னிஸ் வீராங்கனையாக அறியப்படுகிறார். சோனிபட்டில் பள்ளிப்படிப்பை முடித்த அவர், லூசியானா பல்கலைக்கழகம் மற்றும் பிற வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் கல்வி கற்றார்.
அமெரிக்காவில் தன்னார்வ உதவி டென்னிஸ் பயிற்சியாளராகவும் பணிபுரிந்த ஹிமானி, தனது விளையாட்டு வாழ்க்கையில் பல சாதனைகளைப் படைத்துள்ளார். 2018-ஆம் ஆண்டு பெண்கள் ஒற்றையர் பிரிவில் 42வது இடத்தையும், இரட்டையர் பிரிவில் 27வது இடத்தையும் பிடித்துள்ளார்.
இந்நிலையில், ரூ.1.5 கோடி சம்பளம் தரும் விளையாட்டு தொடர்பான வேலையை ஹிமானி மோர் நிராகரித்துவிட்டார். இந்த தகவலை அவரின் தந்தை சந்த் மோர் வெளிப்படுத்தியுள்ளார்.
அமெரிக்காவில் வழங்கப்பட்ட இந்த வேலை, அவரின் விளையாட்டு மற்றும் கல்வித் துறையில் பெற்ற அனுபவத்துக்கான அங்கீகாரம் எனக் கருதப்பட்டது. ஆனால், ஹிமானி அதனை ஏற்காமல் விலகியுள்ளார்.
இதற்கான காரணம், தனது புதிய வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட திட்டங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்பதாகக் கூறப்படுகிறது. திருமணத்துக்குப் பின் அவர் தனது டென்னிஸ் விளையாட்டு வாழ்க்கையை முடித்து, வணிக துறையில் தனது பயணத்தைத் தொடங்க உள்ளார்.
அவரின் தந்தை கூறியதாவது, ஹிமானி தனது பிசினஸை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அதனால், உயர்ந்த சம்பளமுள்ள வேலை வாய்ப்பை நிராகரித்தார் என்று தெரிவித்தார்.
தற்போது ஹிமானி, நீரஜ் சோப்ராவுடன் ஐரோப்பாவில் தங்கி வருகிறார். நீரஜ் அங்குள்ள பயிற்சியில் முழுமையாக கவனம் செலுத்தி வருகிறார்.
இந்த சம்பவம், ஹிமானி தனது வாழ்க்கையில் எடுத்துக்கொண்ட முக்கியமான முடிவு என அனைவராலும் பேசப்படுகிறது.