சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நேற்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-
தமிழகத்தில் முதல் முறையாக கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டி நடந்தது. கடந்த ஆண்டு வெற்றிகரமாக நடைபெற்றது.
இவ்வளவு பெரிய கேலோ இந்தியா விளையாட்டுத் திட்டத்தை நான் எங்கும் பார்த்ததில்லை என்று பிரதமர் குறிப்பிட்டார்.
கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை நடத்த மத்தியப் பிரதேச மாநிலத்துக்கு கடந்த ஆண்டு மத்திய அரசு ரூ.25 கோடி வழங்கியது. இம்முறை தமிழகத்துக்கு மத்திய அரசு ரூ.10 கோடி மட்டுமே வழங்கியுள்ளது.
தமிழகம் முழுவதும் ரூ.355 கோடி செலவில் விளையாட்டு வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் கட்டும் பணி இந்த ஆண்டு தொடங்கும்.
ரூ.11,200 கோடி மதிப்பிலான பணிகள்: ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ், ஒவ்வொரு தொகுதியில் இருந்தும் சட்டப் பேரவை உறுப்பினர்கள் அளிக்கும் கோரிக்கைகளின் அடிப்படையில், ரூ.11,200 கோடி மதிப்பில் 818 பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டு மட்டும் ரூ.5 ஆயிரம் கோடியில் 210 திட்டங்கள் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னையின் வளர்ச்சியில் வடசென்னை மக்களின் பங்கு முக்கியமானது.
அதன் சமூக-பொருளாதார வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, வடசென்னையின் வளர்ச்சியில் உள்ள இடைவெளியைக் குறைக்க ரூ.4,000 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பட்டா வழங்குவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களை சமாளிக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறோம். அடுத்த மாதம் 5 ஆயிரம் பட்டாக்களை சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு வழங்க உள்ளோம்.
இந்த நிதியாண்டில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.35 ஆயிரம் கோடி வங்கிக் கடன் வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளார் முதல்வர். இவ்வாறு அவர் கூறினார்.