
அகமதாபாதில் நடைபெற்ற அல்டிமேட் டேபிள் டென்னிஸ் சீசன் 6 தொடர் இன்று பரபரப்பாக தொடங்கியது. இந்த தொடக்க ஆட்டத்தில் அறிமுகமான கொல்கத்தா தண்டர் பிளேட்ஸ் அணி, டெம்போ கோவா சாலஞ்சர்ஸ் அணியை எதிர்கொண்டு கவனம் ஈர்த்தது. தொடக்க ஆட்டமான ஆடவர் ஒற்றையர் போட்டியில், கொல்கத்தா அணியின் அருணா குவாட்ரி, ஹர்மீத் தேசாயை 2-1 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார். அதனைத் தொடர்ந்து மகளிர் ஒற்றையர் போட்டியில் அட்ரியானா டயஸ் 3-0 என மிக மிக சுலபமாக வெற்றி பெற்றார்.
இதனால், கொல்கத்தா தண்டர் பிளேட்ஸ் அணி 5-1 என முன்னிலை பெற்றது. கலப்பு இரட்டையர் போட்டியில், அட்ரியானா டயஸ் மற்றும் அங்கூர் பட்டாசார்ஜி ஜோடி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி 7-2 என தனது முன்னிலை பெற்றது. அடுத்த ஆட்டமான ஆடவர் ஒற்றையர் போட்டியில் அங்கூர் பட்டாசார்ஜி, ரோனித் பஞ்சாவை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி, டையை 9-3 என தங்களுக்குச் சாய்த்தனர்.
முடிவில் நடைபெற்ற மகளிர் ஒற்றையர் போட்டியில், டெம்போ கோவா அணியின் ஜெங் ஜியான், கொல்கத்தாவின் செலினா செல்வகுமாரை 3-0 என வீழ்த்தினார். இதன் மூலம் டெம்போ கோவா சாலஞ்சர்ஸ் தங்கள் மதிப்புக்குரிய சில புள்ளிகளை சேர்த்துக் கொண்டது. ஆனால் இறுதிக் கணக்கில் கொல்கத்தா தண்டர் பிளேட்ஸ் அணி 9-6 என்ற வெற்றியைப் பதிவு செய்து, தொடரை வெற்றிகரமாக தொடங்கியது.
இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா தண்டர் பிளேட்ஸ் அணி எதிர்கால ஆட்டங்களுக்கு உற்சாகத்துடன் அணுகும் நிலையை உருவாக்கியுள்ளது. இதற்கிடையே, யுடிடி சீசன் 6 தொடரில் அடுத்த ஆட்டமாக ஜூன் 9 அன்று சென்னை லயன்ஸ் மற்றும் டெம்போ கோவா சாலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டமும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.