உலகம் அறிந்த வேகமான மனிதர் உசைன் போல்ட், ஓய்வு பெற்ற பின் பல்வேறு உடல்நல சவால்களை சந்தித்து வருகிறார். 2017 ஆம் ஆண்டில் தடகளத்திலிருந்து விலகிய அவர், அதன்பின் எந்தப் போட்டியிலும் பங்கேற்கவில்லை. தற்போது படிக்கட்டுகளில் ஏறும்போதே மூச்சுத் திணறல் ஏற்படுகிறது என்று அவர் தானே ஒப்புக்கொண்டுள்ளார்.

100 மீட்டர், 200 மீட்டர் மற்றும் 4×100 ரிலே ஓட்டங்களில் உலக சாதனைகளை வைத்திருக்கும் போல்ட், எட்டு ஒலிம்பிக் தங்கங்கள் மற்றும் 11 உலக சாம்பியன்ஷிப் பட்டங்களை வென்று புகழின் உச்சியைத் தொட்டவர். ஆனால், அகில்லெஸ் தசைநார் கிழிதல் மற்றும் நீண்ட காலமாக இருந்த முதுகுத்தண்டின் ஸ்கோலியோசிஸ் பிரச்சினை காரணமாக, ஓட்டம் மற்றும் தீவிர உடற்பயிற்சிகள் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
அவர் தற்போது உடல் உழைப்பு குறைந்த வாழ்க்கையை பின்பற்றி வருகிறார். ஜிம் செல்வதற்கு முயற்சி செய்தாலும், தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது சிரமமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனால், அவரது உடல் தகுதி குறைந்து, சற்றும் சிரமம் ஏற்பட்டாலே மூச்சுத் திணறல் உண்டாகிறது.
இப்போது, தனது குழந்தைகளான ஒலிம்பியா லைட்னிங், செயின்ட் லியோ மற்றும் தண்டருடன் நேரத்தை செலவழிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். ஒருகாலத்தில் உலகின் வேகமான மனிதராக விளங்கிய போல்ட், இன்று படிக்கட்டுகளில் கூட ஏற சிரமப்படுகிறார் என்ற செய்தி அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.