உடல்நலக்குறைவு காரணமாக மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். எனினும் அவர் நிதிப் பிரச்சினையில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சச்சின் டெண்டுல்கரின் நெருங்கிய நண்பரான முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளிக்கு 51 வயதாகிறது. டிசம்பர் 21-ம் தேதி அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இதைத் தொடர்ந்து அவர் தானே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, சமீபத்தில் மருத்துவமனையில் காம்ப்லி நடனமாடும் காட்சிகள் வைரலானது. இந்நிலையில், வினோத் காம்ப்லி நிதி பிரச்சனையில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வினோத் காம்ப்லி பணமின்றி தவிப்பதாக அவ்வப்போது செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. எனினும், அவரது உடல் நிலை எந்த அளவிற்கு உள்ளது என்பது தெரியவில்லை. தற்போது அது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
வினோத் காம்ப்லி கடந்த 6 மாதங்களாக மொபைல் போன் இல்லாமல் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. வினோத் காம்ப்லிக்கு ஐபோன் பிரச்சனை ஏற்பட்டதையடுத்து அதை சரி செய்ய ரூ.15,000 கொடுக்க தவறியதால் போன் கடை உரிமையாளர் வினோத் காம்ப்ளியின் ஐபோனை எடுத்து சென்றதாக கூறப்படுகிறது.
ஒரு காலத்தில் ரூ.13 கோடி சொத்து வைத்திருந்த வினோத் காம்ப்லி தற்போது அதை இழந்து பிசிசிஐ வழங்கும் பென்ஷனையே குடும்ப செலவுக்கு நம்பி இருப்பதாகவும் கூறப்படுகிறது. அவருக்கு பிசிசிஐ மாதம் ரூ.30,000 ஓய்வூதியமாக வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது வீடும் கடனில் உள்ளது. காம்ப்ளியின் மனைவி சமீபத்தில் அளித்த பேட்டியில், ரூ.18 லட்சம் வீட்டுக் கடனுக்காக வங்கி தங்களைத் துன்புறுத்துவதாக கூறியிருந்தார். ஆனால், இவர்களுக்கு சமீபத்தில் அரசியல்வாதி ஒருவர் ரூ.5 லட்சம் கொடுத்துள்ளார், ஆனால் அது வீட்டுக்கடனை செலுத்த போதுமானதாக இல்லை.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும் வினோத் காம்ப்ளியிடம் சிகிச்சைக்கு பணம் இல்லை. எனினும் மருத்துவமனை நிர்வாகம் அவருக்கு இலவச சிகிச்சை அளித்து தற்போது குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.