இந்திய கிரிக்கெட் அணியின் முக்கியமான நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி, உலகின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக கருதப்படுகிறார். 2008ல் அண்டர்-19 உலகக் கோப்பையை இந்தியாவுக்காக வென்றதைத் தொடர்ந்து, சீனியர் அணியில் அறிமுகமானவர் கோலி. அதிலிருந்து தொடங்கி இன்று வரை, டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூவகை கிரிக்கெட்டிலும் இந்தியாவின் வெற்றிகளில் முக்கிய பங்காற்றியுள்ளார். 2011 உலகக் கோப்பை, 2013 சாம்பியன்ஸ் ட்ராபி வெற்றிகளிலும், சமீபத்தில் நடைபெற்ற 2024 டி20 உலகக் கோப்பை மற்றும் 2025 சாம்பியன்ஸ் ட்ராபி வெற்றிகளிலும் சிறப்பாக விளங்கி இந்தியா சாம்பியனாகும் பாதையை அமைத்தார்.

சமீபத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற விராட், இனிமேல் ஒருநாள் போட்டிகளிலேயே கவனம் செலுத்த உள்ளார். அவர் ஓய்வுக்குப் பிறகு ஐசிசி வெளியிட்டுள்ள சர்வதேச டி20 போட்டிகளுக்கான ஆல் டைம் பேட்ஸ்மேன்கள் பட்டியலில், 909 புள்ளிகளுடன் வரலாற்றின் 3வது சிறந்த பேட்ஸ்மேனாகப் பட்டியலிடப்பட்டுள்ளார். டெஸ்ட் தரவரிசையில் 937 புள்ளிகளுடன் 11வது இடத்தில், ஒருநாள் தரவரிசையில் 909 புள்ளிகளுடன் 6வது இடத்தில் அவர் உள்ளார்.
முக்கியமாக, டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய மூவகை ஆல் டைம் தரவரிசைகளிலும் 900 புள்ளிகளுக்கு மேல் பெற்ற ஒரே பேட்ஸ்மேனாக விராட் கோலி சர்வதேச அளவில் புதிய உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதுவரை எந்த வீரரும் இந்த சாதனைக்கு அருகே சென்றதில்லை. டெஸ்டில் 57, ஒருநாளில் 14, டி20-இல் 5 வீரர்கள் மட்டுமே 900+ ரேட்டிங் புள்ளிகளைப் பெற்றுள்ள நிலையில், கோலி மட்டும் மூவகையிலும் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்.
இந்த சாதனை அவரது சக்தியை மட்டும் அல்ல, பல ஆண்டுகளாக வெளிப்படுத்திய நிரந்தரமான செயல்திறனையும் எடுத்துக்காட்டுகிறது. ஓய்வு பெற்றாலும் “ஆல் ஃபார்மட் கிங்” என்ற பட்டத்தை உறுதியாகச் சுமந்து கொண்டிருக்கும் கோலி, இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மற்றுமொரு மைல்கல்லை பதித்துள்ளார்.