இந்தியாவில் நடைபெற்று வரும் 2025-ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, ரஜத் பட்டிதார் தலைமையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை கண்டுள்ளது. இதுவரை நடைபெற்ற 11 ஆட்டங்களில் 8 வெற்றிகளைப் பெற்றுள்ள இந்த அணி, 16 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்து ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இன்னும் மூன்று லீக் ஆட்டங்கள் எஞ்சியுள்ள நிலையில், அவற்றில் குறைந்தது ஒரு வெற்றி பெற்றாலே பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு உறுதி செய்யப்படும்.

இந்நிலையில், இந்த வருடம் கேப்டன் பதவியை ஏற்க அவரைத் தூண்டிய காரணம் குறித்து ரஜத் பட்டிதார் பகிர்ந்துள்ள தகவல் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்ட தருணத்தில் தன்னிடம் எந்த உணர்வுகளும் இல்லை என கூறிய அவர், விராட் கோலி கூறிய சில வார்த்தைகள் தான் தன்னை உற்சாகத்துடன் செயல்பட வைத்ததென தெரிவித்துள்ளார்.
விராட் கோலி, “கேப்டன் பதவிக்கு நீ தகுதியானவன். அந்த தகுதியை நீ உன் உழைப்பால் சம்பாதித்திருக்கிறாய்” என்று கூறிய போது தான் தன்னுள் உணர்வு எழுந்ததாகவும், அந்த வார்த்தைகளே தன்னால் இந்த பொறுப்பை முழுமையாக ஏற்று செயல்படக்கூடிய ஆற்றலைக் கொண்டுவந்ததாகவும் ரஜத் தெரிவித்துள்ளார். இதே பேட்டியில் அவர் கூறியதாவது, விராட் கோலி நெட்டில் பயிற்சி எடுக்கும் போது தன்னைப் பின்தொடர்ந்து பயில்வதையே பழக்கமாக வைத்துள்ளேன் என்றும், அவரின் பேட்டிங் நுணுக்கங்களை கற்றுக்கொள்வதில் அதிக கவனம் செலுத்துவதாகவும் கூறினார்.
மேலும், அவர் உடன் ஓய்வறையை பகிர்ந்து கொள்வது தன்னை பல அனுபவங்களை நேரடியாகக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பைத் தந்துள்ளதாகவும் ரஜத் கூறினார். விராட் கோலியின் செயல்கள் மற்றும் வார்த்தைகள் தனது போட்டி மனப்பாங்கை வடிவமைக்க முக்கிய காரணமாக இருந்ததாகவும் அவர் பகிர்ந்தார். கடந்த 17 ஆண்டுகளாக ஐபிஎல் சாம்பியன்ஷிப் வெற்றியை எதிர்பார்த்து வந்த பெங்களூரு அணிக்கு, இந்த வருடம் அந்த கனவை நனவாக்கும் வாய்ப்பு அதிகம் உள்ள நிலையில், புதிய கேப்டனின் தலைமை திலகமாக பார்க்கப்படுகிறார் ரஜத் பட்டிதார்.