இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமான ஜஸ்ப்ரித் பும்ரா, தற்போது உலகின் நம்பர் ஒன் பவுலராக விளங்கிக் கொண்டிருக்கிறார். தனித்துவமான பவுலிங் ஆக்ஷனுடன் துல்லியமான யோர்க்கர்கள், சீமிங் டெலிவரிகள் மற்றும் அதிரடிப் பந்துகளால் எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்து வருகிறார். 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் தொடர்நாயகன் விருதை வென்று இந்தியாவை சாம்பியன் பட்டத்தை சந்தோஷமாக முத்தமிட செய்தவர் இவர் தான்.

பார்டர்–கவாஸ்கர் கோப்பையில் ஆஸ்திரேலிய மண்ணில் சிம்மசொப்பனமாக விளையாடிய பும்ரா, இந்தியாவின் வெற்றிக்கு தனியாக போராடிய வீரராக பாராட்டப்பட்டார். அவருடைய விளையாட்டு நுணுக்கம் மட்டுமல்லாமல், கிரிக்கெட்டில் அவர் காட்டும் ஒழுக்கமும் ரசிகர்களிடையே பெரும் கவனத்தை பெற்றிருக்கிறது.
விக்கெட்டை வீழ்த்தும் போது பவுலர்கள் பலரும் அதனை வித்தியாசமாக கொண்டாடுவது வழக்கம். சிலர் உரத்த கத்தல், சிலர் பேட்ஸ்மேனிடம் நேரில் சென்று கொண்டாடுவது போன்ற பலவிதம் நடக்கிறது. ஆனால் பும்ரா விக்கெட்டை எடுக்கும்போதும் அதனை மிக அமைதியாக கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இது குறித்து முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க், பும்ராவிடம் நேரடியாக யூடியூப் வாயிலாக கேள்வி எழுப்பினார்.
விக்கெட்டை எடுத்து கோமாளியாக ஆக்ரோஷப்பட வேண்டுமா? என்பதற்கான பதில் மிக தெளிவாகவும் நேர்மையாகவும் இருந்தது. “நான் வெற்றிக்காக விளையாடுகிறேன். போட்டித் தன்மை எனக்குள் இருக்கிறது. ஆனால் எல்லைக்கோட்டையை மீறி யாரையும் மிரட்டும் வகையில் கொண்டாட விரும்பவில்லை,” என்றார் பும்ரா.
“இங்கே அனைவரும் ஒரு குறிப்பிட்ட விளையாட்டு நெறிமுறையை பின்பற்றி விளையாடுகிறார்கள். நானும் அதனை மதிக்கிறேன். ஆக்ரோஷத்தை வெளிக்காட்ட முடியாது என்று இல்லை. ஆனால் அதற்கான நேரமும், வழியும் இருக்க வேண்டும். ஒரு விக்கெட் வீழ்ந்ததற்குப் பிறகு பேட்ஸ்மேனிடம் நேரடியாக சென்று மிரட்டுவது எனக்கு பொருந்தவில்லை,” என்று அவர் கூறினார்.
தன் ஆரம்ப கட்டத்தில் தான் கூட விக்கெட்டுக்குப் பின் ஆக்ரோஷமாக கொண்டாட முயற்சித்ததாகவும் ஆனால் அது தன்னிடம் இயற்கையாக வரவில்லை என்றும் பும்ரா கூறினார். “அப்படி நான் செய்யும் போதும் என் பவுலிங் தரம் பாதிக்கப்படுகிறது. எனவே என் உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொள்வதன் மூலம் நன்கு பவுலிங் செய்ய முடிகிறது,” என்றார்.
இந்த நேர்மையான பதிலை சில விராட் கோலி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஏனெனில் விராட் கோலி விக்கெட் விழும் போது அதை தாமே எடுத்தது போல உற்சாகமாக கொண்டாடுவது வழக்கம். இது அவரின் ஆட்ட பாணியை பிரதிபலிப்பதாக ரசிகர்கள் கூறினாலும், சிலர் பும்ராவின் கருத்து கோலியின் அணுகுமுறையை வெறுக்கிறது என்று விமர்சிக்கிறார்கள்.
எப்படியாயினும், பும்ரா தன் அமைதியான செயல்பாடு மற்றும் அழுத்தமற்ற உணர்வுகள் மூலம் சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்கும் திறமையை நிரூபித்துள்ளார். இது அவர் உலகின் நம்பர் ஒன் பவுலராக விளங்குவதற்கான முக்கிய காரணம் என்றும் சொல்லலாம்.