2024ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக சிறப்பாக விளையாடிய வில் ஜேக்ஸ், மெகா ஏலத்திற்கு முன் அந்த அணியால் நீக்கப்பட்டார். பின்னர், மும்பை இந்தியன்ஸ் அணி அவரை அணியில் சேர்த்தது. தொடக்கப் போட்டிகளில் அவர் சரிவர விளையாடாததால், அவர்மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில், சன் ரைசர்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் வில் ஜேக்ஸ் மிகச் சிறப்பாக விளையாடி அனைத்து விமர்சனங்களுக்கும் பதிலளித்தார். மும்பை அணி முதலில் பந்து வீசியபோது, காயம் காரணமாக கரண் ஷர்மா பந்துவீச முடியாமல் வெளியேறினார். அவருக்குப் பதிலாக பந்து வீசிய ஜேக்ஸ், மூன்று ஓவர்களில் 14 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து டிராவிஸ் ஹெட் மற்றும் இஷான் கிஷன் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர், 163 ரன்கள் இலக்குடன் விளையாடிய மும்பை அணிக்காக மூன்றாவது இடத்தில் களமிறங்கிய வில் ஜேக்ஸ், 26 பந்துகளில் 3 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்களுடன் 36 ரன்கள் அடித்து வெற்றிக்கு முக்கிய பங்களிப்பு அளித்தார். பந்துவீச்சிலும் பேட்டிங்களும் அசத்திய அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
போட்டி முடிந்த பிறகு பேசிய வில் ஜேக்ஸ், தொடரின் தொடக்கத்தில் தனது மற்றும் அணியின் செயல்திறன் குறைவாக இருந்ததாகக் குறிப்பிட்டார். ஆனால், அணியின் வெற்றிக்குப் பங்களிப்பு அளித்தது மகிழ்ச்சியை அளிப்பதாகவும், போட்டியின் முதல் பந்திலேயே கேட்சை விட்டது மனதிற்கு வருத்தம் அளித்ததாகவும் தெரிவித்தார். பின்னர் அதனை சமதிகட்டும் வகையில் பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் சிறப்பாக விளையாட முடிந்தது பெருமை அளிக்கிறது என கூறினார்.
மும்பை அணியில் தனது இடம் பிடிக்க ஆரம்பித்துள்ளதாகவும், அணியின் சூழலுக்கு தற்போது நன்கு பழகிவிட்டதாகவும் வில் ஜேக்ஸ் தெரிவித்தார். பல ஸ்டார் வீரர்களுடன் விளையாடுவது தன்னிடம் நம்பிக்கையையும் தைரியத்தையும் உருவாக்கியுள்ளது என்றும், எந்த இடத்தில் அணிக்குள் நுழைவதாயினும் தனது பொறுப்பை புரிந்து கொண்டு இனியும் சிறப்பாக விளையாடுவேன் என்றும் அவர் உறுதியுடன் கூறினார்.