சென்னை: உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ், இன்று சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத் துறை செயலாளர் அதுல்யா மிஸ்ரா குகேஷை பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அவருக்கு அகில இந்திய செஸ் கூட்டமைப்பு நிர்வாகிகள் மற்றும் குகேஷ் படித்த தனியார் பள்ளி சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
அந்த பள்ளியில் நடந்த பாராட்டு விழாவில் குகேஷ் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:- உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெல்வதே எனது கனவு. இளம் வயதிலேயே சாம்பியன் ஆனதில் மகிழ்ச்சி. எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. போட்டி முழுவதும் பல ஏற்ற இறக்கங்கள் இருந்தன. 14 சுற்றுகள் கொண்ட போட்டியில் சில பின்னடைவுகள் இருக்கும் என்று எனக்குத் தெரியும்.
அதை எதிர்கொள்ள நான் தயாராக இருந்தேன். இருப்பினும், பயம் இல்லாமல் இல்லை. வெற்றியின் தருணம் மிகவும் உணர்ச்சிகரமானது. நான் சிறு வயதிலிருந்தே செஸ் விளையாட்டை மகிழ்ச்சியுடனும், ஆர்வத்துடனும் அணுகி வருகிறேன். சதுரங்கம் மிகவும் அழகான விளையாட்டு. அழுத்தம் இல்லாமல் அணுக வேண்டும். இந்த வெற்றியால் எதுவும் முடிந்துவிடவில்லை. இன்னும் செல்ல வேண்டிய தூரம் அதிகம். நீண்ட நாட்களுக்கு செஸ் போட்டிகளில் விளையாடும் எண்ணம் எனக்கு உள்ளது,” என்றார்.