2023–2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் மிக முக்கியமான இறுதிப்போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் ஜூன் 11 முதல் 15 வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியாவும் தென்னாப்பிரிக்காவும் பலப்பரீட்சை நடத்துகின்றன. கடந்த சீசனில் இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலிய அணி, இந்த முறை தனது பட்டத்தை பாதுகாக்க முயல்கிறது.
முன்னாள் உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவை எதிர்த்து, முதன் முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இடம் பெற்றுள்ள தென்னாப்பிரிக்கா அணிக்கு இது வரலாற்றுச் சந்தர்ப்பம். இதுவரை ஐசிசி நடத்தும் பெரிய தொடர்களில் ஒரு தடவையும் வெற்றிப் பெறாததனால், தென்னாப்பிரிக்கா இந்த முறை மகுடம் சூடுமா என்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
இரு அணிகளிலும் தரமிக்க வீரர்கள் அடங்கியுள்ளதால் இந்த போட்டி மிகவும் த்ரில்லிங் மற்றும் விறுவிறுப்பாக அமையும். இந்திய நேரப்படி இந்த போட்டி தினமும் மாலை 3.30 மணிக்கு துவங்கும். இந்திய ரசிகர்கள் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் தமிழ், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் காணலாம். அதேபோல் JioCinema மற்றும் JioTV போன்ற ஓடிடி தளங்களிலும் நேரலையாக பார்க்க முடியும்.
ஆஸ்திரேலிய அணியில் கேப்டனாக பேட் கம்மின்ஸ் உள்ளார். அவருடன் உஸ்மான் கவாஜா, லபுஸ்சேன், ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், அலெக்ஸ் கேரி உள்ளிட்டோர் உள்ளனர். பந்துவீச்சில் ஸ்டார்க், ஹேசில்வுட், நாதன் லயன், ஸ்காட் போலண்ட் ஆகியோர் அணியின் பலமாக இருக்கின்றனர்.
தென்னாப்பிரிக்கா அணியில் கேப்டனாக டெம்பா பவுமா பொறுப்பேற்றுள்ளார். மார்க்ரம், ரிக்கல்டன், பெடிங்ஹாம், ஸ்டப்ஸ் ஆகியோர் பேட்டிங்கில் முக்கிய இடம் வகிக்கின்றனர். பந்து வீச்சில் ரபாடா, என்கிடி, மகாராஜ், மார்கோ ஜான்சன் உள்ளிட்டோர் அணி வீரர்களாக உள்ளனர்.
இரு அணிகளும் சிறந்த போராட்டத்தைக் காண்பிக்க உள்ள நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை யார் கைப்பற்றப் போகிறார் என்பது குறித்து கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.