பாரமுல்லா: காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தைச் சேர்ந்த 10,000 பெண்கள் இணைந்து காஷ்மீரி நாட்டுப்புற நடனம் ஆடி உலக சாதனை படைத்துள்ளனர். நாட்டின் 78வது சுதந்திர தினத்தையொட்டி, காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் நேற்று ‘கஷுரிவாஜ்’ கலை விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்ச்சியை பாரமுல்லா மாவட்ட நிர்வாகத்தின் கீழ் உள்ள குட்டுவல் ராணுவப் பிரிவு மற்றும் இந்திராணிபாலன் அறக்கட்டளை இணைந்து ஏற்பாடு செய்திருந்தது. பேராசிரியர் ஷௌகத் அலி உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில் கலைஞர்கள் பாரம்பரிய காஷ்மீரி இசை, கையெழுத்து மற்றும் நடனம் ஆகியவற்றை நிகழ்த்தினர். காஷ்மீரின் தனித்துவமான எழுத்துருக்களை எழுத்தர் ஷஃபி மிர் காட்சிப்படுத்தினார்.
சந்தூர் இசைக்கலைஞர் நசீர் அகமது மிர் சந்தூர் வாத்தியத்தை அற்புதமாக மீட்டெடுத்து காதுகளுக்கு விருந்து படைத்தார். அதன்பின் 10 ஆயிரம் பெண்கள் இணைந்து ஆடிய ரவூப் கிராமிய நடனம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
உலக சாதனைகள் கூட்டமைப்பு இந்த நடனத்தை அங்கீகரித்து, உலக சாதனை புத்தகத்தில் சேர்க்கப்படும் என்று அறிவித்தது. பாரமுல்லா மாவட்ட துணை ஆணையர் மிங்கா ஷெர்பா, லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் காய், மேஜர் ஜெனரல் ராஜேஷ் சேத்தி மற்றும் பிற மூத்த ராணுவ அதிகாரிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.