டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் ஓடுபாதை பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற உள்ளதால், வரவிருக்கும் மூன்று மாதங்களில் உள்நாட்டு விமான சேவைகள் கடும் மாற்றங்களை சந்திக்கவிருக்கின்றன. ஜூன் 15 முதல் செப்டம்பர் 15 வரை தினமும் 114 உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்படும் என்றும், கூடுதலாக 86 விமானங்களின் நேரங்கள் மாற்றப்படும் என்றும் டெல்லி சர்வதேச விமான நிலைய நிறுவனம் (DIAL) தெரிவித்துள்ளது.

இந்த திட்டமிடல், விமான நிறுவனங்களுடன் கலந்தாலோசித்த பின் மேற்கொள்ளப்பட்டதாக நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி விதே குமார் ஜெய்புரியார் உறுதியளித்துள்ளார். நாட்டின் முக்கிய விமான நிலையமான இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தினமும் சுமார் 1,450 விமானங்கள் இயக்கப்படுகின்றன. தற்போது பராமரிப்பு பணிகளுக்காக T2 ஓடுபாதை மூடப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள ஓடுபாதைகள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.
மேம்பாட்டு பணிகள் நேரத்தடைகளை உருவாக்கும் என்பதால், அதிகபட்ச பயணிகளைக் கொண்ட விமானங்கள், தற்போது உச்ச நேரங்களில் இயக்கப்படாமல், இயல்பான நேரங்களுக்கு மாற்றப்படுகின்றன. இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா ஆகியவை தினமும் முறையே 33 மற்றும் 25 விமானங்களை ரத்து செய்யக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், மும்பை, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் போன்ற முக்கிய நகரங்களுக்கிடையேயான விமான சேவைகளும் பாதிக்கப்பட உள்ளன.
பயணிகளுக்கு ஏற்படும் சிரமங்களை குறைக்கும் வகையில், விமான நிலைய நிர்வாகம் சில மாற்றீடுகள் மற்றும் முன்கூட்டிய நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. ஆனால் பயணிகள் தங்கள் பயணங்களை திட்டமிடும் முன், விமான சேவைகளின் நிலையை உறுதிப்படுத்திக் கொள்வது அவசியமாகும். ஏனெனில் இந்த மாற்றங்கள் இரண்டு மாதங்களுக்கு மேலாக நீடிக்க வாய்ப்புள்ளது.
இந்த பராமரிப்பு பணிகள், ஓடுபாதைகளின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை மேம்படுத்தும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுகின்றன. CAT III தொழில்நுட்பம் உள்ளிட்ட மேம்பட்ட வசதிகளை இணைக்கும் திட்டமும் இதற்குள் அடங்கும். இது பனிக்கட்டிய நாட்களில் காட்சிதிறன் குறைவாக இருக்கும்போது விமானங்கள் பத்திரமாக தரையிறங்க உதவும் தொழில்நுட்பமாகும்.
இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, டெல்லி விமான நிலையத்தின் செயல்திறனும், பயண அனுபவத்திலும் மேம்பாடு காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், பயணிகள் இந்த மாற்றங்களை கவனத்தில் கொண்டு தங்கள் பயணத்தை திட்டமிட வேண்டியது மிகவும் முக்கியமாகிறது. கடந்த சில நாட்களாக விமானங்கள் தாமதமாகவே புறப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதையடுத்து டெல்லி செல்ல விரும்பும் பயணிகள், தங்கள் விமான டிக்கெட்டுகள் மற்றும் பயண நேரங்களை விமான நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்கள் மற்றும் ஆப்கள் மூலம் சரிபார்த்து முன்பே ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். சரியான திட்டமிடலே, இந்த மாற்றங்கள் காரணமாக ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்க வழிவகுக்கும்.