புரி: வங்கக்கடலில் அந்தமான் பகுதியில் கடந்த 19-ம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, பின்னர் புயலாக மாறியது. டானா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் வியாழக்கிழமை நள்ளிரவு முதல் ஒடிசாவின் புரி மாவட்டத்திற்கும் மேற்கு வங்கத்தின் சாகர் தீவுக்கும் இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன்படி வியாழன் நள்ளிரவு முதல் நேற்று காலை வரை ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் இடையே டானா புயல் கரையை கடந்தது. அப்போது மணிக்கு 110 கி.மீ. காற்று வேகமாக வீசியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒடிசாவில் 10 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். டானா புயலால் மாநிலத்தில் 14 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
புயல் பாதித்த பகுதிகளை ஒடிசா முதல்வர் மோகன் மாஜி நேற்று பார்வையிட்டார். “மாநில அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் ஒரு உயிரிழப்பு கூட ஏற்படவில்லை,” என்றார். மேற்கு வங்கத்தில் புயல் பாதித்த பகுதிகளில் இருந்து 2.5 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டனர். கனமழையால் மாநிலத்தின் 8 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் பகுதியில் மழைக்கு ஒருவர் உயிரிழந்தார்.
ஒடிசாவின் புவனேஸ்வர் மற்றும் மேற்கு வங்கத்தின் கொல்கத்தா விமான நிலையங்கள் வியாழக்கிழமை மூடப்பட்டன. 300 விமான சேவைகள், 552 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. டானா புயல் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இதன் காரணமாக மேற்கு வங்க மாநிலம் ஒடிசாவில் நேற்றும் மழை நீடித்தது. இருப்பினும் நேற்று வழக்கம் போல் ரயில் மற்றும் விமான சேவைகள் இயக்கப்பட்டன.