ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் பா.ஜ. அரசு ஆட்சிக்கு வந்த பின்னர், தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்கள் வேலைநிலைத்தன்மை மற்றும் சம்பள உயர்வு கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மருத்துவர்கள், நர்சுகள் உள்ளிட்ட 16,000க்கும் மேற்பட்டோர் பணிபுரியும் நிலையில், கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி முதல் வேலைநிறுத்தம் தொடங்கப்பட்டது.
ஊழியர்களின் 10 கோரிக்கைகளில் நான்கை அரசு ஏற்றுக்கொண்டது. ஆனால், மீதமுள்ள கோரிக்கைகள் குறித்து தீர்வு அளிக்கப்படாததால் போராட்டம் தொடர்ந்தது. இதனால் அரசு மருத்துவமனைகளில் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.
இந்த சூழலில், போராட்டத்தை முன்னின்று நடத்தி வந்த சங்கத் தலைவர் டாக்டர் அமித்குமார் மிரி மற்றும் பொதுச்செயலர் கவுஷ்லேஷ் திவாரி உள்ளிட்ட 25 பேர் மாநில அரசால் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
இதனால் கடும் அதிருப்தியடைந்த ஒப்பந்த ஊழியர்கள், நேற்று ஒரே நாளில் 14,678 பேர் கூட்டாக ராஜினாமா செய்தனர்.
அரசு மருத்துவ சேவைகள் சீர்குலையும் சூழ்நிலையை உருவாக்கியுள்ள இந்த போராட்டம், சத்தீஸ்கரில் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது. ஊழியர்கள் ராஜினாமாவை வாபஸ் பெறச் செய்வதற்கான நடவடிக்கைகளை அரசு எடுக்குமா என்பது கேள்வியாக உள்ளது.