புதுடெல்லி: பஹல்காம் தீவிரவாத தாக்குதலை அடுத்து சோயப் அக்தரின் சேனல் உட்பட 16 பாகிஸ்தான் யூடியூப் சேனல்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில் அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவில் தற்போது தடைசெய்யப்பட்ட 16 யூடியூப் சேனல்களில் மொத்தம் 63 மில்லியன் சந்தாதாரர்கள் உள்ளனர்.
டான் நியூஸ், சாமா டிவி, ஏஆர்ஒய் நியூஸ், போல் நியூஸ், சுனோ நியூஸ், ஜியோ நியோ உள்ளிட்ட பாகிஸ்தானிய ஊடக நிறுவனங்களின் யூடியூப் சேனல்கள் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளன. இதேபோல், இர்ஷாத் பாட்டி, அஸ்மா ஷிராசி, உமர் சீமா, முனீப் பாரூக் உள்ளிட்ட பத்திரிகையாளர்களின் யூடியூப் சேனல்களும் தடை செய்யப்பட்டுள்ளன. பாகிஸ்தான் ரெபரன்ஸ், சாமா ஸ்போர்ட்ஸ், உசைர் கிரிக்கெட், ராசி நாமா உள்ளிட்ட சேனல்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 22-ம் தேதி பஹல்காமில் 26 பேர் உயிரிழந்தனர். சோகத்தைத் தொடர்ந்து, சேனல்கள் தவறான தகவல்களையும் பிரித்தாளும் உள்ளடக்கத்தையும் பரப்புவது கண்டறியப்பட்டது, மேலும் உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில் தடை விதிக்கப்பட்டது என்று அரசு வட்டாரம் உறுதிப்படுத்தியது. தடைசெய்யப்பட்ட சேனல்களை அணுக முயற்சிக்கும் இந்திய பயனர்களுக்கு இப்போது யூடியூப்பில் ஒரு செய்தி வழங்கப்படுகிறது. அதில், “தேசிய பாதுகாப்பு தொடர்பான அரசு உத்தரவுகள் காரணமாக இந்த யூடியூப் சேனலின் உள்ளடக்கம் இந்த நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.