இந்தூர்: 2025-ம் ஆண்டு நிகழும் 4 கிரகணங்களில் ஒன்று மட்டுமே இந்தியாவில் தெரியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, மத்தியப் பிரதேச மாநிலம், உஜ்ஜைனில் உள்ள ஜிவாஜி ஆய்வு மையத்தின் மூத்த அதிகாரி டாக்டர் ராஜேந்திர பிரகாஷ் குப்தா கூறுகையில், “2025-ல் இரண்டு சூரிய கிரகணங்களும், இரண்டு சந்திர கிரகணங்களும் ஏற்படும்.
இதில், மார்ச் 14-ம் தேதி முழு சந்திர கிரகணம் வரும். இந்த வானியல் நிகழ்வு பகலில் நிகழும் என்பதால், இந்தியாவில் பார்க்க முடியாது. மார்ச் 29-ம் தேதி பகுதி சூரிய கிரகணம் நிகழும். இதுவும் இந்தியாவில் பார்க்க முடியாது. செப்டம்பர் 7 முதல் 8 வரை சந்திர கிரகணம் நிகழும். இது முழு சந்திர கிரகணமாக இருக்கும். இந்த நிகழ்வை இந்தியாவில் காணலாம் என்பதால் இந்திய வானியல் ஆர்வலர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
இந்த ஆண்டின் கடைசி கிரகணம் செப்டம்பர் 21 முதல் 22 வரை பகுதி சூரிய கிரகணமாக இருக்கும். இதுவும் இந்தியாவில் தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.