புதுடெல்லி: ஹரியானா சட்டசபை தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக கணவுர் தொகுதியில் தேவேந்தர் கட்யான் வெற்றி பெற்றார். அதேபோல் ராஜேஷ்ஜுன் பஹதுர்கா தொகுதியில் போட்டியிட்டு பாஜக வேட்பாளரை தோற்கடித்தார்.
இவர்கள் இருவரும் நேற்று மத்திய அமைச்சரும், அரியானா மாநில தேர்தல் அதிகாரியுமான தர்மேந்திர பிரதான் இல்லத்தில் அரியானா பா.ஜ.க. தலைவர் லால் படோலி முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்தனர்.
சாவித்ரி ஜிண்டால் ஆதரவு: இதனிடையே, அரியானா மாநிலம் ஹிசார் தொகுதியில் பா.ஜ.க., சார்பில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டு, சுயேச்சை வேட்பாளராக வெற்றி பெற்ற சாவித்ரி ஜிண்டாலும், பா.ஜ.க., அரசுக்கு ஆதரவளிக்க முடிவு செய்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், ஹிசார் தொகுதி மக்களின் விருப்பப்படி இந்த தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றேன். எனவே எனது தொகுதி மக்களின் நலன் மற்றும் வளர்ச்சியை கருத்தில் கொண்டு பாஜக அரசுக்கு ஆதரவளிக்க முடிவு செய்துள்ளேன்.
முன்னதாக, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் திரிபுரா முன்னாள் முதல்வர் பிலாப் ஆகியோர் நேற்று சாவித்ரி ஜிண்டாலை அவரது இல்லத்தில் சந்தித்தனர்.
ஹரியானா தேர்தலில் பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. தற்போது, மூன்று சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள், பா.ஜ.க.,வுக்கு ஆதரவு அளித்துள்ளதால், அக்கட்சியின் பலம், 51 ஆக அதிகரித்துள்ளது.