புதுடெல்லி: ரூ.8,000 கோடி செலவில் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட இரண்டு போர்க்கப்பல்கள் விரைவில் இந்திய கடற்படையில் இணைக்கப்பட உள்ளன. கடந்த 2016-ம் ஆண்டு இந்திய கடற்படைக்காக ரஷ்யாவில் 4 போர்க்கப்பல்களை உருவாக்க இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. ரஷ்யாவின் கலினின்கிராட்டில் உள்ள யாந்தர் கப்பல் கட்டும் தளத்தில் 2018-ம் ஆண்டு போர்க்கப்பல்களின் உற்பத்தி தொடங்கியது.
2022-ல் ரஷ்யா போர்க்கப்பல்களை இந்தியாவிடம் ஒப்படைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கொரோனா தொற்று மற்றும் ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக போர்க்கப்பல்கள் தயாரிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் 2 போர்க்கப்பல்களை மட்டும் ரஷ்யாவிலும், மீதமுள்ள 2 போர்க்கப்பல்களை இந்தியாவின் கோவாவிலும் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது.
இதன்படி ரஷ்யாவில் 2 போர்க்கப்பல்கள் தயாரிக்கப்பட்டு ஏவுதல் நிறைவடைந்துள்ளது. டிசம்பர் மாதம் முதல் போர்க்கப்பல் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இதற்காக புதிய போர்க்கப்பலை இந்திய கடற்படையில் சேர்க்க மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டிசம்பர் மாதம் ரஷ்யா செல்கிறார். இதற்கு ஐஎன்எஸ் துஷில் என்று பெயரிடப்பட்டுள்ளது. துஷில் என்றால் சமஸ்கிருதத்தில் பாதுகாவலன் என்று பொருள். புதிய போர்க்கப்பல் குறித்து, இந்திய பாதுகாப்பு துறை வட்டாரங்கள் கூறியதாவது:-
ரஷ்யாவில் ரூ.8,000 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்கள் விரைவில் இந்திய கடற்படையில் இணைக்கப்படும். டிசம்பரில் முதல் போர்க்கப்பலான துஷில் கடற்படையில் இணைகிறது. 2-வது போர்க்கப்பலான துமாலை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவிடம் ரஷ்யா ஒப்படைக்கவுள்ளது. இரண்டு போர்க்கப்பல்களும் எதிரிகளின் போர்க்கப்பல்களையும் நீர்மூழ்கிக் கப்பல்களையும் துல்லியமாகத் தாக்கி அழிக்கக் கூடியவை. இந்த போர்க்கப்பல்களில் அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லக்கூடிய பிரம்மோஸ் ஏவுகணைகள் பொருத்தப்பட்டுள்ளன.
போர்க்கப்பல்களில் ஹெலிகாப்டர் தரையிறங்கும் வசதி உள்ளது. இந்த ஹெலிகாப்டர்கள் நீர்மூழ்கிக் கப்பல்களைத் தாக்கி அழிக்கக் கூடியவை. ஒரு போர்க்கப்பல் சுமார் 4,000 டன் எடை கொண்டது. 409 அடி நீளம், 50 அடி உயரம் கொண்ட இந்த போர்க்கப்பலில் ரஷ்ய தயாரிப்பான சூப்பர்சோனிக் ஏவுகணைகள் பொருத்தப்பட்டுள்ளன. ஒரே எரிபொருள் நிரப்பலில் 30 நாட்கள் வரை தொடர்ந்து கடலில் பயணம் செய்யும் திறன் கொண்டது.
இந்தியாவின் கோவா கப்பல் கட்டும் தளத்தில் ரஷ்ய தொழில்நுட்பத்தில் கட்டப்பட்ட 2 போர் கப்பல்கள் அடுத்த ஆண்டு ஜூலை மாதம் கடற்படையில் இணைக்கப்படும். இது இந்திய கடற்படையின் பலத்தை மேலும் அதிகரிக்கும். பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தியாவின் பினாகா ஏவுகணை சர்வதேச அளவில் அதிக கவனம் பெற்றுள்ளது. இந்த ஏவுகணைகளை வாங்க இந்தியாவுடன் ஆர்மேனியா ஏற்கனவே ஒப்பந்தம் செய்துள்ளது.
இதேபோல் பினாகா ஏவுகணைகளை வாங்க பல்வேறு நாடுகளும் விருப்பம் தெரிவித்துள்ளன. இந்த வரிசையில் பிரான்சும் இணைந்துள்ளது. இதுகுறித்து பிரான்ஸ் ராணுவத்தின் மூத்த தளபதி ஸ்டீபன் ரிச்சோ கூறுகையில், “இந்தியாவின் பினாகா ஏவுகணை மற்றும் அதன் ஏவுகணை தளம் மிகவும் சிறப்பாக உள்ளது. இந்த வகை ஏவுகணையை பிரான்ஸ் ராணுவத்தில் சேர்க்க விரும்புகிறோம்” என்றார்.
பினாகா ஏவுகணை மூலம் 75 கி.மீ. தொலைதூர இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்க முடியும். இது பினாகா ஏவுகணை தளத்தில் இருந்து 44 வினாடிகளில் 72 ஏவுகணைகளை ஏவ முடியும்.