ஹரியானா மாநில ஹிசார் பகுதியில், தெருக்களில் சுற்றித்திரிந்த பசுக்கள் திடீரென பலியாகிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் 20க்கும் மேற்பட்ட பசுக்கள் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் தெரு பசுக்களை மீட்டு பராமரிக்கும் கோ சேவா ஹெல்ப் லைன் சமிதி என்ற தன்னார்வ அமைப்பு இந்த விவகாரத்தை வெளிச்சம் போட்டுள்ளது. அமைப்பின் நிறுவனர் மற்றும் இயக்குநரான சீதா ராம் சிங்கால் கூறியதாவது: “ஹிசாரில் தினமும் குறைந்தபட்சம் இரண்டு பசுக்கள் இயற்கை மரணம், நோய் அல்லது விபத்தால் இறக்கின்றன. ஆனால் கடந்த சில நாட்களாக அதிக அளவில் பசுக்கள் இறந்து வருகின்றன. அவை பெரும்பாலும் மக்கள் தரும் அல்வா, பூரி, எண்ணெய் வறுத்த உணவுகள் போன்றவற்றை தின்று ஜீரணிக்க முடியாமல் உயிரிழந்துள்ளன” என்றார்.

அவர் மேலும், நகரின் பல பகுதிகளில் பசுக்கள் அலைந்து திரிகின்றன. மனிதர்கள் சாலையில் எறியும் உணவுகளை தின்று, அவற்றால் வயிற்றில் அமிலத்தன்மை அதிகரித்து உடல் பாதிப்பு ஏற்பட்டு மரணமடைகின்றன என்றும் குறிப்பிட்டார். இந்த நிகழ்வு தெரு விலங்குகளுக்கான உணவு பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.
முன்பும் ஹிசாரில் பசுக்கள் இறந்த சம்பவங்கள் பதிவாகியிருந்தாலும், ஒரே நேரத்தில் 20க்கும் மேற்பட்டவை பலியாகியிருப்பது மக்கள் மத்தியில் பெரும் கவலை ஏற்படுத்தியுள்ளது. சமூக அமைப்புகள், பசுக்களுக்கு ஆரோக்கியமான உணவை வழங்க வேண்டும் என்றும், மக்கள் சாலையில் ஜீரணிக்க முடியாத உணவுகளை எறிவதை தவிர்க்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளன.