இந்தியாவின் முதல் அதிவேக சோதனை ரயில் பாதை ராஜஸ்தானின் தீத்வானா குச்சாமன் மாவட்டத்தில் உள்ள நவன் பகுதியில் உருவாகி வருகிறது. இந்த பாதையின் நீளம் 64 கிலோமீட்டர் ஆகும், மேலும் 37 வளைவுகள் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் பணிகள் முழுமையாக நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பாதையில் ரயில்கள் மணிக்கு 220 கிமீ வேகத்தில் இயங்கவிருக்கின்றன. எதிர்காலத்தில் புல்லட் ரயில்களும் இங்கே சோதிக்கப்படும் என கூறப்படுகிறது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக 23 கிலோமீட்டர் நீளமான சுரங்கப் பாதையும் அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது வரை 80 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. குடாவிலிருந்து நவன் வரையிலான பணிகள் முடிந்துள்ள நிலையில், நவனிலிருந்து மித்ரி கிராமம் வரையிலான கட்டுமான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. முழு திட்டமும் தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (NHSRCL) மேற்பார்வையில் நடைபெற்று வருகிறது.
இந்த பாதையில் பாலங்கள், மேம்பாலங்கள், கீழ்ப்பாலங்கள் போன்ற பல நவீன கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. குடா சால்ட் முதல் ததானா மீதாடி வரையிலான பகுதிகளில் RCC மற்றும் எஃகு பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் ரயில்களின் செயல்திறன் மற்றும் பாதுகாப்பு சோதிக்கப்படும்.
இந்த சோதனைப் பாதை, இந்தியாவின் எதிர்கால அதிவேக ரயில் திட்டங்களுக்கு ஒரு வழிகாட்டியாகக் கருதப்படுகிறது. வேகம் மற்றும் பாதுகாப்பை ஒருங்கே கொண்ட இந்த திட்டம் நிறைவடைந்தவுடன், நாட்டில் தயாரிக்கப்படும் அதிவேக ரயில் தொழில்நுட்பம் முழுமையாக சோதிக்கப்படும். இது இந்திய ரயில்வே வரலாற்றில் முக்கிய மைல்கல்லாகும்.