அமெரிக்காவுடனான முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தத்தின் கீழ், இந்திய ராணுவத்துக்கு முதற்கட்டமாக 3 அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்கள் ஜூலை 22ம் தேதி ஒப்படைக்கப்படவுள்ளன. பல்வேறு தொழில்நுட்ப சிக்கல்கள் மற்றும் விநியோக தாமதங்களால் இந்த ஒப்படைப்பு 15 மாதங்கள் பிற்போட்ட நிலையில் நடைபெற உள்ளது. அமெரிக்காவில் தயாரிக்கப்படும் இந்த ஹெலிகாப்டர்கள், அதிநவீன ஆயுதங்கள், நவீன கணினி மற்றும் பாகங்களை உள்ளடக்கியவை.

2015ம் ஆண்டு இந்தியா, அமெரிக்காவுடன் ரூ.13,952 கோடி மதிப்பில் ஒப்பந்தம் செய்து, விமானப்படைக்கு 22 அப்பாச்சி ஹெலிகாப்டர்களும், ராணுவத்துக்கு 6 ஹெலிகாப்டர்களும் வாங்கப்பட்டன. இவை இந்திய ராணுவத்தில் ஏற்கனவே சேவையிலுள்ளன. அதனையடுத்து, 2020ம் ஆண்டு கூடுதலாக மேலும் 6 ஹெலிகாப்டர்களை வாங்க ரூ.5,171 கோடியில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஹெலிகாப்டர்கள் கடந்த ஆண்டு மே அல்லது ஜூன் மாதங்களில் இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், தொழில்நுட்ப மற்றும் தயாரிப்பு விஷயங்களில் ஏற்பட்ட சிக்கலால் ஒப்படைப்பு தள்ளி வைக்கப்பட்டது. தற்போது நிலைமை சரியான நிலையில், அந்த 6 ஹெலிகாப்டர்களில் முதற்கட்டமாக 3 ஹெலிகாப்டர்கள் ஜூலை 22ம் தேதி இந்தியா வரும் என்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. மீதமுள்ள 3 ஹெலிகாப்டர்களும் விரைவில் வரும் மாதங்களில் வழங்கப்பட உள்ளன.
இந்த அப்பாச்சி ஹெலிகாப்டர்கள், இந்திய ராணுவத்தின் தாக்குதல்திறன் மற்றும் போர்ப்பயிற்சி வலுவை மேம்படுத்தும். எந்தவொரு சூழ்நிலையிலும் செயல்படக்கூடிய திறமை, துல்லியமான தாக்குதல்களை மேற்கொள்ளும் திறன் ஆகியவற்றின் மூலம், பாதுகாப்பு வலையை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.