புதுடெல்லி: டெல்லியில் உள்ள சுஷ்மா ஸ்வராஜ் பவனில் பிரதமர் மோடி நேற்று தனது அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள முதல்–மந்திரிகளை சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பு 5 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. அமைச்சரவையில் பங்கேற்ற அமைச்சர்களை முதல்முறையாகச் சந்தித்த பிரதமர், அவர்களுடன் நீண்ட நேரம் உரையாடியதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அப்போது அமைச்சர்கள் ஓய்வின்றி உழைக்குமாறு அறிவுறுத்தினார். அமைச்சரவை சகாக்கள் மக்களுக்கு சேவை செய்யும் போது “செயல், சீர்திருத்தம், மாற்றம், தகவல்” ஆகிய நான்கு புதிய மந்திரங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
அரசின் செயல்பாடுகள், சாதனைகள், பிரசாரம், விளம்பரம் உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
மத்திய அரசு பொறுப்புடன் செயல்படுகிறது என்ற செய்தியை சமூக வலைதளங்கள் மூலம் மக்களிடம் கொண்டு செல்லுமாறு அமைச்சர்களை பிரதமர் கேட்டுக் கொண்டார்.
அதே சமயம் சமூக வலைதளங்களிலும் மக்களின் பங்கேற்பையும் அதிகரிக்க வேண்டும் என்று பிரதமர் கூறினார்.
மோடி அரசு மூன்றாவது முறையாக பதவியேற்று 100 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், அந்தந்த அமைச்சகங்களின் 10 முக்கிய முடிவுகள் குறித்த தகவல்களை வழங்கவும், அவற்றை மக்களிடம் கொண்டு செல்வதற்கான பிரச்சாரங்களை மேற்கொள்ளவும் அமைச்சர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், மத்திய நிதியமைச்சர் தாக்கல் செய்த பட்ஜெட் அறிவிப்புகள் குறித்தும் இந்த கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.
பிரதமர் மோடியின் அரசு பதவியேற்று 10 ஆண்டுகள் நிறைவடைவதை செப்டம்பர் 5-ம் தேதி கொண்டாடும் நிலையில், பல்வேறு அமைச்சகங்கள் சார்பில் மக்கள் நலத்திட்டங்களை தொடங்க முடிவு செய்யப்பட்டது.
இந்த கூட்டத்தில், பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பதவியேற்ற 85 நாட்களில் இதுவரை எடுக்கப்பட்ட 73 முக்கிய முடிவுகள் குறித்து அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கௌபா விளக்கினார்.
கூட்டத்தில் நாட்டில் சுகாதாரம், கல்வி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு குறித்த விளக்கங்கள் இடம்பெற்றன. மக்களுக்காக அயராது உழைக்க தங்களை விரைவில் தயார்படுத்திக் கொள்ளுமாறு அமைச்சர்களுக்கு பிரதமர் அறிவுறுத்தினார்.