மும்பை நகரில் வரும் ஆகஸ்ட் 27ஆம் தேதி நடைபெற உள்ள விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு மிகப்பெரிய அளவில் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. மஹாராஷ்டிராவில் விநாயகர் சதுர்த்தி மிகவும் பிரமாண்டமாக கொண்டாடப்படும் நிலையில், மும்பையைச் சேர்ந்த கணேஷ் மண்டல் என்ற அமைப்பு ரூ.474 கோடி மதிப்பிலான இன்சூரன்ஸ் செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கடந்த ஆண்டில் ரூ.400 கோடியாக இருந்த இந்த காப்பீடு, இந்த ஆண்டு அதிகரித்துள்ளது. தங்கம், வெள்ளி ஆபரணங்களின் மதிப்பு உயர்வு மற்றும் தன்னார்வலர்கள், பூசாரிகள், பாதுகாப்பு ஊழியர்கள் ஆகியோர் காப்பீட்டில் சேர்க்கப்பட்டதே இதற்குக் காரணமாகும்.
நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் வழங்கியுள்ள இந்த ‘ஆல்-ரிஸ்க்’ திட்டம், தங்கம், வெள்ளி, விலைமதிப்புள்ள கற்கள், தீ மற்றும் நிலநடுக்கம் போன்ற பேரிடர்களுக்கான பாதுகாப்பை வழங்குகிறது. இதன் ஒரு பகுதியாக தனிநபர் விபத்து காப்பீடும் சேர்க்கப்பட்டுள்ளது.
ஆபரணங்களுக்கான காப்பீடு மட்டுமே ரூ.67 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2024இல் ரூ.43 கோடியாகவும், 2023இல் ரூ.38 கோடியாகவும் இருந்தது. மேலும், 375 கோடி ரூபாய் தனிநபர் விபத்து காப்பீடு மூலம் பக்தர்கள், பூசாரிகள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட பலரும் பாதுகாப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
பொதுமக்களுக்கான சொத்து காப்பீடும் ரூ.30 கோடி மதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்பி சேவா மண்டலத்தின் தலைவர் அமித் பாய் கூறுகையில், தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வும், அதிகமானோர் பங்கேற்பும் இந்த காப்பீட்டு தொகையை உயர்த்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த பிரமாண்டமான ஏற்பாடு மூலம், மும்பையில் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை பாதுகாப்பான சூழலில், மக்களின் நம்பிக்கையுடன் கொண்டாடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.