
பாலக்காடு: வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் வாயிலாக பங்குச் சந்தையில் முதலீடு செய்து அதிக லாபம் பெறலாம் என ஆசை வார்த்தை கூறி, 48.59 லட்சம் ரூபாய் மோசடி செய்த வாலிபரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.

பாலக்காடு மாவட்டம் ஒற்றைப்பாலம் பகுதியைச் சேர்ந்த ஒருவர், சைபர் கிரைம் போலீசில் அளித்த புகாரில், டெலிகிராம் ஆப் மூலம் தொடர்பு கொண்டவர்கள், வீட்டிலிருந்தே ‘ஷேர் டிரேடிங்’ செய்து பணம் சம்பாதிக்கலாம் என கூறி, தமக்கு 48.59 லட்சம் ரூபாய் இழப்பை ஏற்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.
மாவட்ட எஸ்.பி. அஜித்குமார் அறிவுறுத்தலின் பேரில், டி.எஸ்.பி. பிரசாத், இன்ஸ்பெக்டர் சசிகுமார் தலைமையில் நடந்த விசாரணையில், திருவனந்தபுரம் மாவட்டம் காட்டாகடை பகுதியைச் சேர்ந்த ஆண்டோ பிஜு (25) என்பவர் இந்த மோசடியில் தொடர்புடையவர் என உறுதி செய்யப்பட்டது.
2024 நவம்பரில் நடைபெற்ற இந்த மோசடியில், ஆண்டோ பிஜு, புகார்தாரரிடமிருந்து 48.59 லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு, அதில் 2.25 லட்சம் ரூபாயை காட்டாகடை பகுதியில் உள்ள மற்றொரு வங்கி கணக்கிற்கு மாற்றியுள்ளார்.
மேலும், இந்த வங்கி கணக்கிற்கு தெலுங்கானா மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட இரு ஆன்லைன் மோசடி வழக்குகளும் தொடர்புடையது என விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, ஆண்டோ பிஜு கைது செய்யப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.